பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 அகநானூறு -களிற்றியானை நிரை



பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை
நல்எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர்தாமே - அளிஇன்று
ஏதில் பொருட்பிணிப் போகித், தம்
இன்துணைப் பிரியும் மடமை யோரே! 15

கடலின் நீரை முகந்து, நிறைந்த சூல்கொண்டவைகளாயின கரிய மேகங்கள். ஒளிமிக்க மின்னலுடன், வலமாக எழுந்து சென்று அவை முழங்கின. புற்கென்ற தலையினையும் மடப்பத்தினையும் உடைய பிடியானை ஒன்று கோடைக் காலத்தே, ஞாயிற்றின் வெம்மையினால் வாட்டம் அடைந்தது. அது, இப்போது மேலே உயர்த்திய தன் துதிக்கையும் மறையத்தக்க ஆழ்ந்த வெள்ளத்திலே படிந்து, தன் களிற்றுடன் நீர்விளையாடத் தொடங்கிற்று. நிலமும் வானமும் மழைநீரால் பொருத்தப்பட்டு ஒன்று போலத் தோன்றின. குறிய நீரினை உடைய நாழிகை வட்டிலால் நாழிகையினைக் கணக்கிட்டு கூறுபவர் அல்லாமல், பிறர், ஞாயிறு இருக்கும் இடத்தினையே அறியமாட்டாதவராக அச்சங் கொண்டனர். இவ்வாறு, எங்கும் பரந்து பெய்கின்ற பெருமழையோடு, தண்ணிய இடிமுழக்கத் தைக் கொண்ட மேகங்களோடு மழை பெய்யும் கார்காலமானது விளங்கிற்று.

அவ் வேளையிலே, கொய்யப்படும் தழைத்த முல்லை மலர்கள் காற்றோடு சேர்ந்து மயங்குதலினால், கரிய பெருங் கானம் முல்லை மணம் நாறுவதுபோன்று, நறுமணங் கமழும் நறிய நுதலினையும், பலவகையான முடித்தலையுடைய கருமையான கூந்தலையும், மென்மையாம் தன்மையினையும் உடைய நம் தலைவியினது நல்ல அழகுடைய மார்பினைப் பிரியாது சேர்ந்திருப்பவர்களாயிருக்கின்றோம், நாம்.

சற்றும் இரக்கம் இல்லாதவர்களாக, காதல் வாழ்விற்கு அயலதாகிய பொருட்பற்றினாற் சென்று, தம்முடைய இனிய துணைவியரைப் பிரிகின்ற மடமையை உடையவர்கள், எக் காலத்தும் மிகவும் இரங்கத்தக்கவர்களே யாவர்!

சொற்பொருள்: 2. சுடர் - ஒளி.4.கைமாய் நீத்தம் - உயர்த்திய துதிக்கை மறையும் அளவுள்ள வெள்ளம். 6. குறுநீர் - நாழிகை வட்டிலின் அளவுபட்ட நீர். கன்னல் - கன்னலை, வட்டிலை. 7. கதிரவன் எங்குள்ளனன் என அறியாது வானம் இருண்டு கிடத்தலால் உலகம் அஞ்சிற்று என்க. 8. எழிலி - மேகம். 9. மயங்குதல் - நெருங்குதல். 10. மை - பசுமை. 12. சேர்ந்தனம் - சேர்ந்திருக்கிறோம். 13. அளியர் - அறிவற்றோர்.