பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 89


இதன்கண், தலைவனின் பிரிவு வேந்துவினை முடித்தல் என்க. 'அழும்பில் வேள்' என்பானுக்குரிய கோநகர் அழும்பில் எனக் கூறுதலும் பொருந்தும்.

45. உடைமதில் ஓரரண்!

பாடியவர்: வெள்ளி வீதியார். திணை: பாலை. துறை: வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: அன்னி, குறுக்கைப் பறந்தலையிலே திதியனின் புன்னை குறைத்த போர்வெற்றி, ஆந்திமந்தியின் கதை, வானவரம்பன்.

(தலைவன் வேற்றுார் சென்றனன். வரவில்லையே அவனென மறுகினாள் அவன் மனைவி. தோழியோ, அவன் குறித்த காலத்து வருவான்’ என வற்புறுத்தினாள். அப்போது தலைவி, அவனுடைய பிரிவினை நினைந்து நினைந்து நொந்து கூறியது இது)

வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்,
கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5

காடு இறந்தனரே, காதலர்; மாமை,
அரிநுண் பசலை பாஅய, பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும், அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10

புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரியதே; யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதி மந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ - பொலந்தார், 15

கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர் அரண்போல
அஞ்சுவரு நோயொடு, துஞ்சா தேனே!

தோழி! உலர்ந்த வாகை மரத்தினிலுள்ள, முதிர்ந்த நெற்றுக்களைக் கொண்ட கொத்துக்கள், ஆடுகளத்தே கூத்தர்கள் ஒலிக்கும் பறையினைப்போல விட்டுவிட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தகைய கோடைத்தன்மை மிகுந்தது அகன்ற பெரிய குன்றம் ஒன்று. அதனிடத்தேயுள்ள நீரற்றுக்-