பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 97


எனவும், துணிவின்கண் ஐயம் சிறிது நினைத்தல் எனவும்’ கூறுவர் நச்சினார்க்கினியர். ‘புலி’ என்னுங்காட்டிலே, உதவ விரைந்து முன்வந்தான்’ என அவனைப் போற்றியது இது. 'வேங்கை மலர் கொய்யத் தாழ்ந்து கொடுக்கும்’ என்றோர் நம்பிக்கை மலையிலே வாழ்பவரிடம் உண்டு. அவன்மேல் அவளும் காதல் கொண்டாள் என்பது குறிப்பு.

49. ஆடுவழி அகலேன்!

பாடியவர்: வண்ணப்புறக் கந்தரத்தனார்; வண்ணப் புறக் கல்லாடனார் எனவும் வேறுபாடம் உண்டு. திணை: பாலை, துறை: உடன்போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது.

(அருமையாக வளர்த்த செல்வமகள்,தன் காதலனுடனே உடன்போக்கில் போய்விட்டனள். அவளது பழைய செயல்களை எல்லாம் நினைந்து புலம்பி வருந்துகிறாள் செவிலித்தாய்)

"கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இlஇயர், என்உயிர்'என,
கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5

குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தரீஇயினே னாக, என்மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, 10

வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்
காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை
அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15

கோதை ஆயமொடு ஓரை தழீஇத்,
தோடு.அமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!

“கிளியும் பந்தும் கழங்கும் மிகவும் விரும்புபவள்; அருளும் அன்பும் சாயலும் நற்பண்பும் உடையவள்; இவற்றுள் முன்னாட்களைப்போல் அல்லாது வேறுபட்டிருக்கின்றனள். இஃதென்னவோ? என் உயிர் கழிவதாக” என்று கூறினேன்.