பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 99


50. சொல்லின் எவனோ பாண!

பாடியவர்: கருவூர்ப் பூதஞ்சாத்தனார்; கருவூர்ப் பூதன் மகனார் கொற்றனார் எனவும் வேறு பாடம் உரைப்பர். திணை: நெய்தல். துறை: தோழி பாணனுக்குச் சொல்லியது.

"மெல்லியற் பொறையும் நிறையும்” என்னும் துறைக்கு உதாரணமாகக் காட்டி, இதனுள் காமமிகுதியால் கண் தாமே அழவும், கற்பிற் கரக்குமெனத் தலைவி பொறையும் நிறையும் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறு கூறுவன் எனக் கருதி” என்பர் நச்சினார்க்கினியர்.

"பிரிவாற்றாது துன்புறுங்காலை, அவ்வாற்றாமை தலை மகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும், அக் கூட்டத்திற்கே நிமித்தமாகும், ஆராய்ந்து உணரின்” என்பர் பேராசிரியர்.

(களவிலே கூடிய காதலன், பலநாட்கள் வாராது போகவே, தலைவி பாணன்மூலம் அவனுக்குத் தூது உரைக்க முயல்கின்றாள்.)

கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,

பகலும் நம்வயின் அகலா னாகிப்
5


பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்.
இனியே, மணப்பருங் காமம்தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?’ என்னாது,
 மல்லன் மூதூர் மறையினை சென்று,

சொல்லின் எவனோ - பாண! எல்லி
10


மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்’எனக்
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்துதல் அரிவை'யான் என்செய்கோ? எனவே!

கடல் ஒலியவிந்து கிடந்தாலும், தோணிகள் கடலில் இல்லாதிருப்பினும், மிகுந்த நீருடைய பெரிய கழியிலே சுறா முதலிய கொடிய மீன்கள் செருக்கித் திரிந்தாலும், கொடிய வாயினரான பெண்கள் அலர் எடுத்துத் தூற்றினாலும், மாட்சியுடைய இழையினைக் கொண்ட தன்னுடைய நெடுந் தேரானது தாழ்த்து நிற்க, பகற்காலத்துங்கூட நம்மிடத்தே நின்றும் அகலாதவனாகி, அடுத்தடுத்து நம் தலைவன் முன்ன