பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 103


இன்உயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச்செய்யா தீமே!

உயரமாக ஓங்கி வளர்ந்த மரங்களையுடைய மலைச் சாரலிலே, வள்ளிக்கொடி சுற்றிப் படர்ந்திருக்கும் செழிப்போடு விளங்குமொரு வேங்கைமரத்திலே, அதன் மிகவும் உயரத்தி லிருக்கும் கிளையிலேயிருந்த, பொன்போன்ற புது மலர்களைப் பறிக்க விரும்பினாள் ஒரு குறமகள். அவளால் முடியாதாகத் துயருற்று, வேங்கை வேங்கை எனக் கூச்சலிட்டாள். 'உயர்ந்த பாறை அடுக்குகளை உடைய, இருண்ட குகைகள் பலவாயி ருக்கும் பக்கமலைச் சாரலிலே பசுவினைக் கொல்லும் வலிமை யான புலியாகும் அஃது என, வில்லைக் கையிலே கொண்ட வரான கானவர்கள் எண்ணினர். மனையினையடுத்துள்ள தம்முடைய சிற்றுார் தனிமையாகிக் கிடப்பக், கல்லென்ற ஒலியுடன், அவ்விடத்தை நோக்கியும் சென்றனர். அத்தகைய நாட்டையுடையவன் நம் தலைவன்.

'நம்முடைய நெஞ்சத்தை அவனுடைய அகன்ற மார்பு இடமாகக் கொண்டுவிட்டது' என்று, அறிவிப்போமா? அறிவியாமல் இருப்போமோ? இப்படி இதுவரை இருவகைப் பட்டிருந்த ஆராய்ச்சியும் ஒருமுடிவுக்கு வந்திருக்கிறது. நம் உடலிலேயுள்ள இனிய உயிரானது போவதேயானாலும், நம் தாய்க்கு, நின் மகளது அழகிய மலர்போன்ற மையுண்ட கண்ணில் படர்ந்த பசலையானது காமநோயினால் வந்தது' என்று மட்டும் சொல்லாதிருப்பாயாக தோழி! நீ வாழ்க!

சொற்பொருள்: 1. வலந்த சுற்றிய 2. பொங்கர் - பூக்கள் நிரம்பிய கிளை. 4. பூசல் - ஆரவாரம். பயிற்றல் - பலகால் அடுத்தடுத்துக் கூறுதல். 5. ஏகல் - மிக்க கல். 9. நெஞ்சமர் வியன்மார்பு - நம் நெஞ்சம் மேவினவனுடைய பரந்த மார்பு. 15. காமநோயென்று விளங்கச் சொல்லாது, கூட்டமினாட்டத் தாற் சொல்லு என்றார்.

உள்ளுறை பொருள்: வேங்கைப் பூக்கொய்பவளின் புலி புலி’ என்ற ஆரவாரம், ஊரனைத்தும் அறியக் காரணமாயிற்று. அதுபோல, அவரை நாம் இச்சிக்கத் தொடங்கிய அளவிலேயே ஊரில் அலர் உண்டாயிற்று என்க. விளக்கம்: "யாக்கை இன் உயிர் கழிவதாயினும் என்றது, அந்நோயைத் தன்னால் மாற்ற இயலாதென்ற நிலையை உரைத்ததுமாகும். இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவியை விரைய மணந்துகொள்வதற்கு முனைவான் என்பதாம்.