பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அகநானூறு -களிற்றியானை நிரை

'கானத்துச் சென்றவள் ஏதமுற்றால் தான் வாழேன் எனக் கூறி, அவள் ஏதமுறாது இனிதே கடத்தலைத் தாய் வேண்டுகிறாள்' எனினும் ஆம்.

56. இம்மனை உம்மனை அன்று!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் திணை: மருதம். துறை: பரத்தை மனைக்குச் செல்லுகின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 'பிறன் பேதைமை பொருளாக நக்கது' என்பர் பேராசிரியர்.

(பரத்தைமை மேற்கொண்டான் தலைவன். அதன் பொருட்டு அவனுக்கு உதவிய பாணன் தெருவழியே சென்ற போது, பசு பாய்ந்துவரக் கலங்கித் தலைவியின் வீட்டினுள் புகுந்தான். அவனைச் சுட்டித் தோழியிடம் கூறுவாளாய் எள்ளி நகையாடுகிறாள் தலைவி. தோழி தலைவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி கூற, அவள் வாயின் மறுத்து இப்படிக் கூறுகின்றாள் என்க.) -

          நகை ஆகின்றே - தோழி! நெருநல்
          மணிகண் டன்ன துணிகயம் துளங்க,
          இரும்புஇயன் றன்ன கருங்கோட்டு எருமை,
          ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
          கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய 5

          காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
          மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
          தண்துறை ஊரன் திண்தார் அகலம்
          வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
          பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10

          புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கிய, யாழ்இட்டு;
          எம்மனைப் புகுதந் தோனே, அதுகண்டு
          மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று,
          'இம்மனை அன்று; அஃதுஉம்மனை' என்ற
          என்னும் தன்னும் நோக்கி, 15

          மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே.

தோழி! நேற்று, இரும்பினால் செய்தாற்போன்ற கருமையான கொம்புகளையுடைய எருமையொன்று, பளிங்குமணியைக் கண்டாற்போலத் தோன்றும் தெளிந்த குளத்து நீரைக் கலங்கச் செய்தது. அவ்விடத்து, ஆம்பலின் மெல்லிய இலைகளும் கிழியுமாறு, குவளையின் குவிதல் நீங்கிய பல மலர்களையும்