பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அகநானூறு -களிற்றியானை நிரை


துளி பெய்தலைத் துறந்து, வன்கண்மையுடன் மேகம் நீங்கும். அதனால், தம் இலைகள் யாவும் கெட்டு ஒழிதலின், மரங்கள் பொலிவு அற்றிருக்கும். அரத்தினால் போழ்ந்து அராவப்பட்ட முனையைக் கொண்ட பற்களையுடைய அம்பினையும், கண்களை இடுக்கிக் குறிபார்க்கும் நோக்கினையும் உடையவர்களாகக், கற்குவியல்கள் உயர்ந்துள்ள அகன்ற இடமாகிய, நெல்லி மரங்களையுடைய நீண்ட இடங்களிலே, இருட்டு வேளையிலே தம் நிரைகளைக் கவர்ந்து சென்ற கள்வர்களிட மிருந்து அவற்றை மீட்பதற்காக வேண்டி, விரையச் சென்று, அவருடன் போரினைச் செய்து வென்று பட்டவர்கள், மானமிகுந்த வீர மறவர்களுள் சிலர்.

அவர்களுடைய பெயர்களையும் சிறப்புக்களையும் பொறித்து, நெறிதோறும் மயிற்பீலி சூட்டிய நடுகற்களானவை விளங்கும். ஊன்றிய வேல்களையும், சார்த்திய பலகைகளையும் உடையனவாக அந்நடுகற்கள் போர்முனை போலக் காணப்படும். வேற்றுமொழி வழங்கும் தேயத்தைக் கொள்வதனை விரும்பிச்செல்லும் மன்னர்களது கழியாற் பிணிக்கப்பட்ட கரிய பரிசையின் நிரையினைக் கண்டாற் போன்று, மரித்தவர்களை இட்டுத் தழைகளால் மூடிய கற்குவியல்கள் விளங்கும். அத்தகைய பாழிடத்தே உருவற்றதும் ஊர்ந்திடாததும்ான பேய்த்தேருடன், நிலத்திலே பொருந்திய மின்மினிப் புழுவைப்போல, “எங்கும் விளங்கும் பரற்கற்கள் பலவும் ஒளிவிடும்” என்பர்.

யான் என்ன செய்வேனோ? (அவர் அவ்வழிச் சென்றனரே? எனக் கலங்குகிறாள் தலைமகள்)

சொற்பொருள்: 2. வானம் வாழ்த்தி - வானம்பாடிப்புள். 5. போழ்தல் - அராவுதல். வாளியம்பு - எயிற்றம்பு, 6. நிரம்பா நோக்கு - கண்ணிடுக்கிக் குறிபார்க்கும் பார்வை. நிரையங் கொண்மார் நரகம் புகுவாரும் ஆம்.13. கழியாற் பிணிக்கப்பட்ட கருங்கடகு மன்னர் கடகுக் காரரை அழைத்துப் படைகாண்டல். 14.உவலிடுபதுக்கை கருகினவை கருங்கடகிற்கு உவமை. ஆளுதல் - ஆட்படுதல் 15. உருவில் பேய் - பேய்த் தேர்.

68. வருவாராயின் பருவம் இது!

பாடியவர்: ஊட்டியார். திணை: குறிஞ்சி, துறை: தலைமகன் இரவுக்குறி வந்தமையறிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.

'இது, 'தாயது துயிலுணர்ந்து தலைவன் வந்தமை, தோழி தலைவிக்குக் கூறியது' என்பர், நச்சினார்க்கினியர்.