பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 145


எங்கும் பரந்துகிடக்கும் பசிய முல்லைக்கொடியிலே, மெத் தென்ற செவ்வியையுடைய மென்பதம் வாய்ந்த புதிய மலர்கள் மிகப்பலவாக மலர்ந்திருக்கும். அவை, வெள்ளிய களர் ஆகிய அறல்பட்ட மணலில் உதிர்ந்தும் கிடக்கும். வண்டுகள் அரும்பினை மலர்விக்கும் தண்மையும் முல்லை நிலத்திலே கமழும்.

"அவ்விடத்தே. கரிய கொம்பினையுடைய ஆண்மானது அழகிய இளைய பெண்மானின் மருட்சியுற்ற பார்வையினைக் காணுந்தொறும், நின்னை அவன் நினைவான்.”

"வினையை வெற்றியுறச் செய்த மேம்பாட்டுடன், மகிழ்ச்சியாற் சிறந்து, போரில் வல்ல வீரர்கள் தன்னுடைய முயற்சியின் வலிமையினை வாழ்த்திவர, அவன் வருவான்.”

“பாகனே! திண்ணிய தேரினை இன்னும் விரைவாகச் செலுத்துவாயாக’ எனக் கூறிச் செலுத்திக்கொண்டு, இன்றே நம் தலைவனும் வருவான். நாம் நடுக்கத்தை அமைவோம்” என்று, வன்புறையாகிய பல இனிய சொற்களைக் கூறிவரும் நின் சொல்லைக் கேட்டுத், துணிவுடன் நான் அமைந்திருப்பேன்.

ஆனால், மாலை வருத்துவதனால்தான் இயலாதவளா யுள்ளேன்!

சொற்பொருள்: 1. வினைவலம் படுத்தல் - வினையை வெற்றிப்படுத்தல்.5 சிறுபல வரிப்ப-பல வரிப்படச் சிறிய வாகிய பலவும் பரக்க. 7 தாய் - தாவ; தாவச் செய்த. விளக்கம்: மான்பிணையின் மருட்சியைக் கானுந் தொறும் நின்னை நினைவன்; விரைந்தும் வருவன் என்கிறாள் தோழி. அத்துடன் காட்டினும் மழைக்காலம் வந்ததை உணர்வன் என்கிறாள். தலைவியோ, மாலையும் கோவலர் குழலும் வருத்தாவெனின், நின் பேச்சுக்கு நானும் செவி சாய்த்து அமைந்திருப்பேனே என்கின்றாள்.

75. பிரியச் சூழ்தலும் உண்டோ?

பாடியவர்: மதுரைப் போத்தனார். திணை: பாலை. துறை: 'பொருள்வயிற் பிரிவர் என வேறுபட்ட தலைமகட்குப், 'பிரியேன்” எனத் தலைமகன் சொல்லியது: 'பிரியார்' எனத் தோழி சொல்லியது எனவும் பாடம்.

(பொருள் கருதித் தலைவன் பிரிந்து செல்லப் போகின் றனனோ எனக் கலங்குகிறாள் தலைவி. அந்தக் கலக்கத்தால் மெலியவும் செய்கிறாள். அதனை உணர்ந்த தலைமகன், அவளிடம் பிரியேன் எனக்கூறித் தெளிவிக்கின்றான்.)