பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அகநானூறு - களிற்றியானை நிரை


வென்ற சிறப்பும் உடையன. தோல்வியே அறியாதவன் அவன். அத்தகைய அவனுக்கு, முத்தலை வேலும் உண்டு. அவன் ஏறி ஊர்ந்தது ஆன் ஏறு; அவனில் ஒரு பகுதியாகச் சேர்ந்திருப்பவள் உமையம்மை!

செவ்வானத்தைப் போன்று ஒளியுடைய செந்நிறம் வாய்ந்தது அவனுடைய திருமேனி. அவ் வானத்திலே விளங்கும் பிறை நிலவினைப் போன்ற வளைந்த வெண்மையான கூரிய பற்கள் அவனுடையவை. நெருப்பு கப்புவிட்டு எரிந்தாற் போன்று விரிந்து, இடையீடுபட்டு விளங்குவது அவனுடைய முறுக்குண்ட செஞ்சடை. வளர்ந்து முதிராத இளந்திங்களுடன் கூடியதாக அவன் சென்னி ஒளிவீசும். மூப்பே இல்லாதவரான அமரர்களும் முனிவர்களும், மற்றையோரும், பிறர் யாவரும் அறியமுடியாத, அத்துணைப் பழைமையான தன்மையினை உடையவனும் அவன்!

கோடுகளுடன் விளங்கும் வலிய புலியின் தோலினை உடுத்தவன்; யாழ் இசை முழங்குகின்ற நீலமணிக் கழுத்தினன்; உயிர்கள் பால் அளப்பருங் கருணையினை உடைய அந்தணன் அச் சிவபெருமான்! அவனுடைய, அழிதல் இல்லாத திருவடி நிழலையே உலகம் தனக்குக் காப்பாகக் கொண்டு என்றும் தங்கியிருக்கின்றது!

சொற்பொருள்: 2. தார் - சேர்ப்பது, விசேடமாக இடுவது. மாலை - கட்டுவது; அழகுக்கு இடுவது. கண்ணி - தொடுப்பது; போர்க்காலத்துச் சூடுவது. 5. கணிச்சி - குந்தாலி. மூவாய் வேல் - மூன்று முனைகளையுடைய முத்தலைச் சூல். 10. எரி அகைதல் - நெருப்பு கப்புவிட்டு எரிதல். அவிர்ந்து விளங்குதல் - விட்டுவிட்டு விளங்குதல். 13. மரபு - தன்மை. 15. யாழ்கெழு மணிமிடறு - யாழிசையினும் இனிக்கப் பேசும் அருங் குரல் எழும் அழகிய கழுத்து; சாமவேதம் பாடின மணிக் கழுத்து மணிக் கழுத்தாவது, நஞ்சுண்டு நீலநிறம் பெற்றதனால், 16. தவிர்ந்தன்று - தங்கிற்று. அதனால், உலகு இடையூறற்று வாழ்கின்றது என்பது கருத்து. இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது என்பர் பேராசிரியர்.

விளக்கம்: இதன்கண், ஊழிமுடிவிலே புவன போகங்களை மீளவும் படைக்கத் திருவுள்ளங்கொண்ட இறைவன், ஆதிசக்தியுடன் இயைந்து நிற்கின்ற பெருங்கருணை வடிவமும் பெறப்படும்.