பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அகநானூறு - களிற்றியானை நிரை



'நம் தலைவியின் அழகிய நெற்றியும் பசலையினால் அழகிழந்து போகுமாறு அவளைப் பிரிந்து, முயற்சியினால் பொருள் ஈட்டி வருவதற்குக், கடத்தற்கு அரிய காட்டினையும் கடந்து செல்லுதலும் நன்று’ என நீ எண்ணினையானால், எனக்கு மிகவும் துன்பத்தினையே கருதினையாவாய்.

இடிகளை உமிழ்கின்ற வானமானது வெம்மையுற்று, மழையும் பெய்யாது நீங்கிப்போக, அதனால் எவ்விடத்தும் குடிகள் தத்தம் ஊரைவிட்டுப் பெயர்ந்து போவாராகவும் காண்கின்ற கோடைக்குச் சான்றாகப் பலரும் சுட்டிக் கூறும் வெம்மையினையுடையது, என்றென்றுமே பாழ்பட்டுக் கிடக்கும் பாலை நிலம்.

கயிற்றினால் பிணிக்கப்பட்டுள்ள குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஒலைகளை எடுத்துக் கொள்வதற்கு, அக் குடத்தின்மேலிட்ட இலாஞ்சினையை ஆராய்ந்து பார்த்த பின் நீக்கும் ஆவண மாக்களைப் போல,

தம் உயிரானது வேறொரு பிறவியிலே சென்று புகுமாறு மாற்றார்கள் அஞ்ச, நல்ல போரினை வென்றுபட்ட தறுகண்மையினையுடைய வீரர்களின் குடரைச், சிவந்த காதுகளையுடைய பருந்தானது, காண்பவர் அஞ்சுமாறு, அவர்கள் உடற்கூட்டினின்றும் இழுத்துப் போடும்.

கற்களுடைய கவர்ந்த வழிகளிலே சென்றால், ஆங்குள்ள சிற்றுார்களில் புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளிபட்ட நிழலிலே பெருங்காற்று அலைத்துக் கொண்டிருக்கும். அவ்விடத்தே, இருள்மிகுந்த மாலைப் பொழுதிலே,

சேரமானின் படைமறவனாகிய, வளைந்த வில்லைத் தன் பெரிய கையிலே கொண்ட, அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியை உடையவனாகிய பிட்டன் என்பான், பகை மன்னரது அரிய போரின்கண் உயர்த்த, திருந்திய இலைத் தொழிலையுடைய வேலினைப்போல், இவளுடைய நீர் ஒழுகும் கண்கள் என் கண்முன் தோன்றி, எனக்குப் பொறுத்தற்கும் அரிதான துயரத்தையும் தருமன்றோ!

சொற்பொருள்: 1. தரீயர் - பெறவேண்டி 6. சுட்டு - பலரும் கருதிச் சொல்லப்படுதல் 7 குழிசி-குடம் பொறி-இலாஞ்சினை: முத்திரை. 13. புகர் - புள்ளி.14 எல்வளி பெருவளி. 15. வானவன் - சேரன் 16 பிட்டன் - சேரர் படைத்தலைவர்களுள் ஒருவன்.

விளக்கம்: 'குழிசியோலை’ என்பது குடவோலை; மக்களிடமிருந்து பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்க, இவ்வாறு ஊர்ஊராகக் குடவோலை இடும் முறையிலே அந்நாளில்