பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அகநானூறு -களிற்றியானை நிரை


          தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
          தேம்கமழ் புதுமலர் நாறும்இவள் நுதலே?

ஓங்கி உயர்ந்த மலைநாடனே!

விளங்கித் தோன்றும் மிகுதியான வலிமையினையும், தன் இனத்தைத் தன்னுடனே கூட்டிக் கொள்ளும் இயல்பினையும், வரியினையுடைய வண்டினம் மொய்த்துக் கொண்டிருக்கும் வாய்புகு மதநீரினையும் உடைய, புள்ளிகள் பொருந்திய நெற்றியினால் அழகுற்று விளங்கும் வலிபொருந்திய யானைக்கூட்டத் தலைவனாகிய களிறானது, அகன்ற இடத்தையுடைய காட்டினிடத்தேயுள்ள ஆளியினை நினைந்து, முதற் சூலையுடைய தன் இளையபிடி அஞ்சியதாக, அதனைக் கரிய சருச்சரையுடைய தன் பெரிய கையினால் பாதுகாவலுறத் தழுவிக் கொள்ளும், அத்தகைய மலைச்சாரலிலே

தேன் கூடுகளைப் பிழிந்து மது எடுத்துக் கொண்டிருக்கும் குறவர்களது வீட்டு முற்றங்களிலே, மூங்கிலின் அழகிய மலர்கள் காய்ந்து உதிரவும், காந்தளது நீண்ட இதழ்களையுடைய பெரிய மலர்கள் முறியவும், தண்ணென்ற வாடைக் காற்று வீசிக் கொண்டிருக்கும்; தோன்றுகின்ற பனியையுடைய அத்தகைய முன்பணிக் காலத்திலே,

எம்மைவிட்டுப் பிரிந்த சில நாட்களுக்குள்ளாகவே, நாம் இல்லாதிருக்கின்ற தனிமைத் துன்பத்தினால், தம்முடைய ஊரினிடத்தே தனித்துத் துயருறும் இரங்கத்தக்கவராகிய இவர், என்ன கதிதான் அடைவாரோ என எண்ணி, இரக்கங்கொண்டு, உலகெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் பலரும் புகழ்கின்ற நல்ல புகழினையும், வாய்மை தவறாத மொழியினையும் உடைய கபிலன் ஆராய்ந்து வினைசெய்ய, நெடுந்தொலைவினின்று வளம் பொருந்திய வயல்களிலே விளைந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்து, அவற்றைப் பெரிய தண்டினையுடைய ஆம்பல் மலராகிய அவியலோடு கூட்டிச் சமைத்து உண்பித்துப், பல ஆண்டுகள் கழியவும், தாம் விரும்பிய நெறியினின்றும் பிறழாமல், பகைவர் படைகளிலே புகுந்து வாட்போரிட்டு அவர்களைக் கலக்கிய, நிமிர்ந்த கொம்புகளையுடைய போர்யானைகள் மலிந்த மூவேந்தர் படைகளையும் தோற்று ஓடச் செய்த, விரைவினையுடைய குதிரையினையும் கைவண்மை யினையும் உடைய பாரிவேளின், இனிய பசுமையான சுனையிடத்தே பூத்த, தேன் மணக்கும் புதுமலர்போல மணம்நாறும் இவளது நெற்றியினைச்,

சிறிதளவேனும் நீர் நினைத்தும் அறிந்தீரோ?