பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அகநானூறு - களிற்றியானை நிரை




தோழி! சிறப்புடைய மூங்கிலைப் போன்ற பணைத்த எம் தோள்களும் நெகிழுமாறு, எமக்குத் தொலைவிலுள்ள நாட்டுப் பொன்னணிகள் ஆகிய செல்வங்களைக் கொணர்ந்து தருவதற்காக, அவர் எம்மைப் பிரிந்து போயினரே!

தரையெங்கும் வெடிப்புக்கள் ஏற்படுமாறு, வெம்மையான கதிரவன் நெருப்பினைப் போல எங்கும் பசுமையற்றுப் போகுமாறு எரித்தலினால், தம் நிழல் தேய்ந்து உலறிப் போன மரங்களை உடையது; பாறைகளும் கொதிக்கும்படியாக நீரற்றுப்போன பசுஞ்சுனைகள், நீர்ப்பசையே அற்றுக் காய்ந்து போனதனால், சொரிந்த நெல் பொரியாகப் போகும் அளவுக்குக் கொடிய வெம்மையினையும் உடையது; யாவரும் அவ்வழியாக வருபவர் இல்லாததனால், வழிப் பறித்து உண்டு வாழ்பவரும் தமக்கு ஏதும் கிடையாதாராகிப் பசியினால் மடிய, அச்சுரம் தன் அழகிழந்து போனதாகிக் கிடக்கின்றது. அசைகின்ற கிளைகளை யுடைய, நாரற்ற முருங்கையின் உச்சியிலே இருந்த வெண்மையான பூக்கள், சூரைக் காற்றாகிய கடுங்காற்று எடுத்துச் சிதற எங்கும் உதிர்ந்து பரவிச் சிதறி, கரையிலே மோதி உடைந்து அலைகள் பொங்கிச் சிதறுவதைப் போலக் கிடக்கும் கடல் முகப்புப் போல, அக் காட்டின் முகப்பும் தோன்றும். அத்தகைய கொடிய காட்டையும் கடந்து அவர் சென்றனரே!

அப்படிச் சென்ற அவர், 'வண்டினம் மொய்த்துச் சிதறு மாறு, புதிய பூக்கள் தொடுத்த கண்ணியைச் சூடிக், கால்களிலே ஒள்ளிய வீரக் கழல்கள் ஒலிமுழங்க, அஞ்சத்தக்க குதிரைகளை உடைய மழவர்களை வெருட்டி ஒட்டிய, முருகப் பெருமானைப் போன்ற நல்ல பேராற்றலையுடைய நெடுவேள் ஆவியின், அறுத்துத் திருத்திய கொம்புகளையுடைய போர் யானைகள் மலிந்த பொதினி மலையினிடத்தே, 'சாணைக்கல் செய்யும் சிறுவன் அரக்கோடு சேர்த்து இயற்றிய கல்போல, யாமும் என்றும் நின்னைப் பிரியமாட்டோம்' என்று, தாம் முன்னர் எமக்குக் கூறிய அந்த உறுதிச் சொற்களையும் மறந்து விட்டனரோ, தோழி?

சொற்பொருள்: 1. ததைந்த - சிதறின; மலர்ந்த 2. உருவக் குதிரை - உட்கத்தக்க குதிரை. 4. அறுகோடு - அறுத்துத் திருத்தின கோடு; சிங்கத்தை வென்ற கோடும் ஆம். பொதினி - ஆவியின் மலை. 5. காரோடன் - பணையான். பயின் - அரக்கு. 6. கல் - சாணை; அரக்குங் கல்லும் சேர்த்தியபின் பிரிக்க ஒண்ணாது; அதுபோலச் சேர்ந்த யாமும் பிரியோம் என்றனன். 9. வெறுக்கை - செல்வம். 11. உலறிய - பட்டுப்போன. 14. வெளவுநர் - ஆறலை கள்வர். 17. சூரல் - சுழித்து அடித்தல்.18,19 முன் கடல் - கடல் முன்.