பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 173


விளங்கும்; அத்தகைய காட்டு வழியினையும், அவள் கடந்து செல்பவளாவாளோ?

விசைகொண்ட வில்லினரான மறவர்கள், கொழுப்பினை யுடைய ஊனைத் தின்று, கருமை பொருந்திய தம் வலிய தோள்கள் பூரிக்கப், பாரம் மிகுந்த கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும், செப்பமுடைய வாளினைக் கொண்ட வீரர்களின் அருந்தலைகளைத் துணிப்பர். மிக்க புலால் நாற்றம் நாறும் அந்தப் போர்க்களத்திலே, தம் துடியினைத் தாழக் கொட்டியவாறே, அரிய அணிகலன்களைத் தமக்குத் திறையாகப் பெற்றுக் குவித்த, பெரிய போர்விருப் பினையுடைய வெற்றி வீரர்களான அவர்கள், விற்கள் நிரம்பிய அரணிடத்தே, அவற்றை, அவரவர் கொள்ளவேண்டிய பங்குகளாக, முறையே தமக்குள் பகுத்துக் கொள்வர்.

இடையிடையே தினைப்புனங்களையுடைய, அத்தகைய பெரிய காட்டின் வழியானது, நெடுந்தொலைவு பரந்துள்ளது என்றும் எண்ணாது, அவனோடும் அவள் கூடிச் சென்றனளே! அவளுடைய மென்மையான சிவந்த பாதங்கள் வருந்துமாறு, அவள் அதனைக் கடந்து செல்வதற்கும் வன்மையுடையவள் ஆவாளோ?

சொற்பொருள்: 1. வேனிற்காலத்து மாதம் இரண்டனுள் நடுவாகிய நாள் இருபது. 2. தேர் - பேய்த்தேர். 3. குடிஞை - பேராந்தை, 4. விடரகம் - மலைப்பிளவுகள். 5. இரட்டுதல் - விட்டுவிட்டு ஒலித்தல். 6. சிள்வீடு ஒரு வகை வண்டு கறங்கும் ஒலிக்கும். 7. காழியர் - வண்ணார். 9, களரி - களர் நிலம் 10. விளர் - கொழுப்பு. 11. மலர பூரிக்க. 14. ஞாட்பு - பாக்கக்காரரும் கள்ளரும் பொருத பூசற்களம், 17 கொல்லை இரும்புனம் - முன் புனமாக இருந்து கோடைக் காலத்தே காய்ந்து தரிசாகக் கிடக்கும் கொல்லைக் காடுகள்.

விளக்கம்: "ஒடுதேர்நனந்தலையினையும், முட்கள் கிடக்கும் இடத்தையும், கல்லெறியிசையின் இரட்டுமவ்விடங்களையும், களறிபறந்த மருங்கினையும் உடைய, இரும்புனக் கொல்லை’ எனக் காட்டிற்கு அடைவுபடுத்துக. ‘செல்வமான இல்லத்தை விட்டுக் கொடிய காட்டு வழியூடும் போயினளே என வருந்தினள் செவிலித்தாய். மகளின் காதற்பெருக்கை வியந்ததுமாம்.

90. தளையவிழ் தாழை!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: நெய்தல்.துறை: பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது.