பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அகநானூறு - களிற்றியானை நிரை



இது, 'பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும் என்கின்றது' என்பர், நச்சினார்க்கினியர். (தொல். பொருள் 114)

('தலைவன், விரைந்துவந்து வரைந்து கொள்ளல் வேண்டுமென்பாள் தோழி. தலைவி இற்செறிப்புற்றதும், ஊரலர் எழுந்ததும், அவளுடைய அழகினால் பலர் அவளை அடையப் போட்டியிடுவதும் பற்றிக் கூறுகிறாள்.)

          மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
          இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
          தளைஅவிழ் தாழைக் கானல்அம் பெருந்துறைச்
          சில்செவித்து ஆகிய புணர்ச்சி அலர்எழ,
          இல்வயிற் செறித்தமை அறியாய்; பன்னாள் 5

          வருமுலை வருத்தா, அம்பகட்டு மார்பின்
          தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்,
          'நீங்குக' என்று,யான் யாங்ஙனம் மொழிகோ?
          அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணா.அது
          பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர், 10

          இரும்புஇடம் படுத்த வடுவுடை முகத்தர்,
          கருங்கட் கோசர் நியமம் ஆயினும்
          'உறும்' எனக் கொள்குநர் அல்லர் -
          நறுநுதல் அரிவை பாசிலை விலையே!

கட்டவிழ்ந்த மடங்கள் பொருந்திய தாழைகள் செறிந்த கானற் சோலையையடுத்த, பெருந்துறையினிடத்தே, முதியவர் களைப்போல வெண்மையான தலையினை உடைய கடல் அலையானது, அக்கடற்கரையிலே, இளையவரான பெண்கள் இழைத்தாடும் வரிமனையினைச் சிதைக்கும். உங்கள் களவுக்கூட்டம், சிலர் செவிப்பட்ட மாத்திரத்தானே, அலராகி, ஊர் முழுவதும் பரவிற்று. அதனால், தாய், நின் காதலியை இல்லிடத்தே செறித்து விட்டதனையும் நீ அறிந்தாயில்லை!

பலநாளும், நின் அழகிய பெருமையுடைய மார்பகம், வளரும் முலையினையுடைய எம் தலைவியினால் முயங்கி வருத்தப் பெறாததனாற், கலங்கும் உள்ளத்தோடு வருந்தும் நின்னிடத்தே, 'அவளை மறந்துவிட்டுப் போய்விடுவாயாக' என்று, யானுந்தான் எவ்வாறு நினைக்கச் சொல்லுவேன்?

நறுநுதலினளான இவளுடைய பசிய அணிகட்கு விலையாக, அரிய வலிகொண்ட தெய்வங்களையுடைய செல்லுரரின் கீழ்ப்பாலினதாகப், பெருங்கடல் முழக்கத்தினை உடைத்தாகிய படைக்கலம் இடம்படச் செய்திட்ட வடுக்களையுடைய முகத்தினரான, அஞ்சாமையையுடைய கோசர்களது,