பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அகநானூறு - களிற்றியானை நிரை



          பெரும்பேர் அன்பினர் - தோழி! - இருங்கேழ்
          இரலை சேக்கும், பரல்உயர் பதுக்கைக் 10

          கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
          நெடுங்கால் ஆசினி ஒடுங்க்ாட்டு உம்பர்,
          விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
          பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
          தடமருப்பு எருமை தாமரை முனையின், 15

          முடமுதிர் பலவின் கொழுநிழல் வசதியும்,
          குடநாடு பெறினும், தவிரலர் -
          மடமாண் நோக்கிநின் மாண்நலம் மறந்தே!

தோழி! உலகமானது விளக்கமுறுவதற்குக் காரணமாகப் பகலினைத் தந்து உதவிய பல கதிர்களையுடைய ஞாயிறானது, வளம் கெழுமிய பெரிய மலைச்சாரல்களும் தம் பயன்கெட்டு ஒழியுமாறு, காய்ந்தது. அதனால், அருவிகள் ஏதும் இல்லை யாகிப்போன பெரிய மலைச்சாரல்களிலே, அச்சமூட்டும் சுனைகளைத் துழாவியும், அவற்றுள் யாதொன்றினும் நீர்ப்பயனைக் காணாது, பாசியினைத் தின்றது, பசிய கண்ணினையுடைய ஆண் யானை ஒன்று. வயிற்றிலே முடுகும் பசியோடு, அயலே அயர்ந்து கிடந்த தன் பிடியுடன்,'அதுவும் ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடக்கும். மூங்கில்களின் கணுக்கள் வெடித்துப் போகுமாறு, வெயில் எரித்துக் கொண்டிருக்கும் அகன்ற அப்பாலைநிலத்தினுடே, அரிய பொருள் வேட்கையின் காரணமாக, நம் தலைவர் நம்மை அகன்றும் போயினர். ஆயினும், அவர், நம்மீது பெரிதும் பேரன்பு உடையவரே ஆவர்! கருநிறமான கொம்புகளையுடைய ஆண்மான்கள், உயர்ந்த கற்குவியல்கள் விளங்கும் பரல்களிலே தங்கிக் கிடக்கும், வன்கண்மையினையுடைய மழவர்கள் தம் களவாகிய உழவிற்கு எழுகின்ற இடம் அது. நீண்ட அடிமரத்தினையுடைய, ஆசினி மரங்கள் செறிந்த ஒடுங்காட்டிற்கு அப்பால், இறுகப் பிணித்த முழவினையுடைய குட்டுவன் என்பான் காத்து வருதலால், பசி என்பதனையே அறியாத, மருதவளம் மிக்க ஊர்கள் பல உள்ளன. வளைந்த கொம்புகளையுடைய எருமையானது, தாமரை மலர்களை உண்ணலை வெறுத்தால், வளைவுமிக்க முதிர்ந்த பலாவினது கொழுவிய நிழற்கண்ணே, அவ்விடத்துக் கிடந்து உறங்கும். அத்தகைய குடநாட்டினையே பெற்றாலும், மடமானைப் போன்ற நோக்கினையுடைய, நின்னுடைய மாட்சியுற்ற நலத்தினை மறந்துகை விடுபவர் அல்லர், அவர் (அதனால், நீயும் ஆற்றியிருப்பாயாக.)