பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 185


அடைகரையிலேயுள்ள, அரத்தின் வாய் போன்ற கூர்மையான முட்களையுடைய பிரம்பினது நீண்ட கொடியானது, அருவி யிடத்துள்ள ஆம்பலது அகன்ற இலையினைச் சுற்றிக் கொள்ள, அசைந்துவரும் வாடைக் காற்று அவ்விலையைத் தூக்கலின், கொல்லன் உலையிலே ஊதப் பெறும், விசைத்து இழுத்துவிடும் தோலினைப்போல, அவ்விலை புடைத்துப்புடைத்துச் சுருங்கும். அத்தகைய வயல்களையும் தோட்டங்களையும் உடைய, காஞ்சி மரங்கள் செறிந்த ஊரையுடைய, தலைவனே! -

'ஒள்ளிய தொடியினையுடைவராகிய பரத்தையர் கூட்டத்தினுள்ளே, நீ ஓர் இளைய மகளை விரும்பி மணந்து கொண்டனை' என்று, ஊரார் சொல்வார்கள்!

செம்பொன்னாலாகிய சிலம்பினையும், குறங்குசெறி பூட்டிய தொடைகளையும், அழகொழுகும் மாமை நிறத்தினையும் உடையவள், அஃதை என்பவள். அவள் தந்தையர், பெருமை தங்கிய யானைகளையும், வெல்லும் பேராற்றலையு முடைய சோழர்கள். வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர்ப் போக்களத்திலே, சேர பாண்டியராகிய இருபெரு வேந்தரும், தம்முடன் போரிட்டுக் களத்திலேயே வீழ்ந்துபட, ஒளிரும் வாளினால் நல்ல போர் வெற்றியும் அவர்கள் பெற்றனர். அப்போது, தோல்வியுற்றாரின் களிறுகளை அவர்கள் கவர்ந்து கொண்டபோது எழுந்த ஆரவாரம் போலப், பலராலும்

பேசப்பட்டு, நின் செயலும் ஊரலராகின்றதே! (அதனைக் காண்டாயாக)

சொற்பொருள்: 1. மண்டை கலயம், மொந்தை. இறவு - இறால் மீன். கலித்தல் - துள்ளுதல். 3. பழனம் - மருத நிலம். 7. வீங்குபுஞெகிழும் - புடைத்துச் சுருங்கி நெகிழும்.10. குறுமகள் - இளைய மகள். 17. கம்பலை - ஆரவாரம் 18. பலர் வாய்ப்படல் - பலராலும் சுட்டிப் பேசப்படுதல், அலர்.

உள்ளுறை: நறவுண்ட இறால்கூட்டுமுதல் தெறிக்கும்’ அதுபோல, நின் பாணனால் இசைவிக்கப் பெற்ற பரத்தை யானவள், தான் இருந்த மனையையும் விட்டு, நின் போதையினால் செருக்கி, எமக்கும் போட்டியாகத் திகழ் கின்றாள் என்க.

'பிரப்பங் கொடியினால் சுற்றப்பட்ட ஆம்பல் இலை வாடை அசைத்த வழியெல்லாம் அலைவதுபோல, நீயும் நின்பாணனால் சூழப்பட்டுப் பரத்தைமைகொண்டு அலை

கின்றனை’ என்க.