பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 7


நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்தான். அவன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது இது.

(முன் ஒரு காலத்து நெஞ்சிலே பொருளார்வம் எழத் தலைவியைப் பிரிந்து போயினான் ஒரு தலைவன். இடை வழியிலே, அவன் மனம் அவளுடைய எண்ணத்தைத் தூண்டி அவனை மீளுமாறு வற்புறுத்தியது, அதனை மீறிப்போய்ப் பொருள் தேடி வந்தான். இப்போது, மீண்டும் அவன் நெஞ்சு பொருளாசை கொள்ளத் தொடங்கியது. அதன் பழைய நிலையைக் கருதி அவன் போகாதிருந்தான். அவனுடைய காதல் மிகுதியும், அவளைப் பிரிய அவன் உள்ளம் ஒருப்படாத இணைந்த பாசமும் இதன்கண் புலப்படும்)


இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஒமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-5


வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த கவவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின் - ஆனாது கவரும்10


புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்,15


அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே?

பெரிய உப்பங் கழிகளிலேயுள்ள முதலைகளின் மேல் தோலைப் போன்று விளங்கும், கருத்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தின் காட்சிக்கு இனிய பெரிய கிளையில், பாதுகாவலையுடைய பரந்த ஓர் இடத்திலே, குஞ்சு பொறித்துக் காவல் இருந்த வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு மிகுதியான இரையினைக் கொணர்ந்து தருவதற்காக மயங்கி, இரையை விரும்பி எழுந்தது, சிவந்த காதுகளையுடைய ஓர் எருவைச் சேவல்.