பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 201




அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
ஒள்இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல்வரை நாடன் தற்பா ராட்ட
யாங்குவல் லுநள்கொல் தானே - தேம்பெய்து,
மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி, 5

ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்மருண்டு
பந்துபுடைப் பன்ன பாணிப் பல்லடிச் -
சில்பரிக் குதிரை, பல்வேல் எழினி - 10

கெடல்அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனைஎரி நடந்த கல்காய் கானத்து
வினைவல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம்பிழி நறுங்கள் மகிழின், முனைகடந்து
வீங்குமென் சுரைய ஏற்றினம் தருஉம் 15

முகைதலை திறந்த வேனிற் பகைதலை
மணந்த பல்அதர்ச் செலவே!

மணிகள் இழைத்துச் செய்த பொற்கலத்திலே, இனிய பாலோடு தேனும் கலந்து ஏந்தியவராகச் செவிலித்தாயர் ஊட்டவும் உண்ணாது, அடம் பிடித்தவள் என் மகள். நிழலினிடத்தேயுள்ள குளத்தைபோலக், குளிர்ச்சி பொருந்திய நெடிய மாளிகையிடத்தேயுள்ள, எமது பெருஞ் செல்வத்தையும் இப்போது கருதாதவளாயினாள்.

அகன்ற பாறையிடத்தே, அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின், ஒள்ளிய இலை விராவிய மாலையினை அணிந்து, மெல்லென, நல்ல மலைநாடனாகிய தலைவன் தன்னைப் பாராட்டி வர, அவன் சொல்லிய பொய்மைகளினாலே, உள்ளமும் மயங்கினாள்.

பந்தின் புடைப்பைப் போன்ற தாளத்துடன் கூடிய பல அடியிட்டினையும், சிலவகைச் செலவினையுடைய குதிரை களையும், பல வேற்படையினரையும் உடைய, கெடுதலில்லாத வலிமை பொருந்திய எழினி என்பவன் ஏவிவிட்ட தொழிலை முடிப்பதற்காக, மிக்க எரிபரந்து கிடக்கும் பாறைகளும் கொதிக்கும் கானத்திலே, போர்த்திறம் வாய்ந்த அம்பின் கை குறிதப்பாது தொடுத்தலையுடைய மறவர்கள், பிழிந்த தேனாற் சமைத்த நறிய கள்ளினை உண்டு, அம் மகிழ்ச்சியினாற் பகைவரின் போர்முனைகளை எளிதாக வென்று, பருத்த மெல்லிய மடியினையுடையவும், ஏறுகளோடு கூடியவுமாகிய