பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 203



நெருப்புக் கப்புவிட்டு எரிந்தாற்போலும், செவ்விய தாமரைப் பூக்களையுடையன வயல்கள். அவ்விடத்தே, நெற்பொறிகள் தெறித்துக் கிடப்பனபோலப், பலப்பல சிறிய மீன்கள் விளங்கும். அவற்றை உண்ணும்பொருட்டு, மணங் கொண்ட பசிய இலையிலே, பறத்தல் ஒழிந்த முதிய கிச்சிலிப் பறவையானது, பையப்பைய அசைந்தபடி வந்திருக்கும். அத்தகைய துறைகள் பொருந்திய ஊரனின் மனைவியானவள், தன் கணவனை, நம்மோடும் கூட்டி வெறுத்துப் பேசுகின்றனள் என்பர்.

நாம் அதற்கேதுவாகியது ஒன்றும் செய்யாதேம். ஆயினும், அவள் கூறும் பழியினின்றும் உய்யாமையினாலே,

ஒளிறும் வாட்படையினையுடையவன் வெற்றி பொருந்திய செழியன் குற்றமற்ற படைப்பயிற்சியோடு கூடிய நெருங்கிய போர்களிலே, அவன் அடுந்தோறும் களிறாகிய உணவினைப் பெறும் பாணன் அடிக்கும் மத்தளத்தின் கண்போல, அவள், தன்வயிற்றிலே அறைந்து கொள்ளும்படியாக,

செறிந்த வளைகள் ஒலிமுழங்கக் கைகளை வீசிச், சிறிதுபொழுது அவ்விடத்தே சென்று, நாமும் உலவிவருதற்குச்செல்வோமா?

சொற்பொருள்: 1. அகைதல் கொழுந்துவிட்டு எரிதல். 3. வெறி - மணம். 4. முதுசிரல் - கிழடாய்ப்போன சிரல் 8. தெளிர்ப்ப - ஒலிக்க, 9. உலமந்து உலாவி.1. கற்பின் மண்டமர் - போர்க்குரிய மரபுகள் வழுவாமல் செய்யும் கடும்போர்.12. களிறு வல்சியாவது - பரிசாகத் தரப்படுவதனால்,

உள்ளுறை: முதுசிரல், மீனுக்கு அருகே பாசடை மீதிருந்தும், அதனை நுகரமாட்டாது, இளஞ்சிரல்கள் பற்றி நுகர்வதற்கும் பொறுக்காது புலம்புதல்போல, முதுமையால் எழுச்சியற்ற தலைவி, தலைவன் தன் வீட்டிலேயே இருந்தும், அவனை வளைத்துத் தன்பாற் கொள்ள முடியாமலும், ஏனைய இளம்பெண்டிர் அவனைத் தழுவுவதனைக் கண்டு பொறாமலும் புலம்புகின்றாள்' என்கின்றனள். இதனால், தலைவியின் முதுமையைச் சுட்டிப் பழித்தவாறும், அவன் தன்பால் எளிதிற் சிக்குவோன் எனத்தான் தன் அழகாற் செருக்குற்றவாறும் காணலாம்.

107. மணமனை கமழும் கானம்!

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார். திணை: பாலை. துறை: தோழி குறிப்பறிந்து தலைமகற்குச் சொல்லியது. சிறப்பு: கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்.