பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 205


நெல்லின் அரிசியோடு ஒருங்கே கூட்டி, ஆயர் சேரியிலிருந்து கொண்ட தயிரினைப் பெய்து சமைத்த, வெள்ளிய நினத்தினை உருகச் செய்த, வெண்மையான சோற்றினைப், புள்ளி பொருந்திய அடியினையுடைய தேக்கினது அகன்ற இலையிலே வைத்து உண்பவரும், கல்வியறிவற்ற நெடுமொழிகளைக் கூறுபவரும், சினமிக்க நாய்களையுடையவருமான வடுகரது, வலிய ஆண்மை விளங்கும் அரிய போர் முனையினைக் கடந்து சென்று,

இடிந்து வீழும் மண்ணினால் விளையும் ஊறினுக்கு அஞ்சும் ஒரே துறையினையுடைய ஒடையிலுள்ள, இன்னாத தாகிய ஏற்றத்திலே வழுக்கி விழுந்து, மிக்க முடம்பட்டுத் தன்னந்தனியே ஒழிந்து கிடக்கும், வலிமை வாய்ந்த மெலிந்த பகட்டினை,

புல்லிய குடுமியினையுடைய சிறுவர்கள், அழகிய தளிரை யுடைய இருப்பையின், அற்றவாயினையும் வெள்ளிய உட்டுளை யினையுமுடைய பூவை, வில்லினால் உதிர்த்து, அவற்றைத் தின்னவரும் மரைமான்களை வெருட்டிவிட்டு, உண்பிப்பர். வரையகத்தேயுள்ள, அத்தகைய சிற்றுார்களிலே, மாலைக் காலத்தே, நினக்கு இனிய துணையாகித் தங்கிக், காலை வேளைகளிலே புதிய தேனையுடைய நறும் பூக்கள் உதிர்ந்து கிடத்தலால், மணம் கமழும் மனைபோன்று மணநாறும் காட்டிலே,

நின்னுடன், கடையொத்த குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழியும், உடன் வருவதற்கு இசைந்தனள் காண்!

சொற்பொருள்: 2, அயாஅ வருத்தம். 5. உணங்கல் - காய்ந்த தசை, ஆனிலைப்பள்ளி - ஆயர் சேரி, அளை தயிர் 11. கதநாய் சினமிக்க நாய். 12. வல்லாண் அருமுனை - வல்லாண்மையுடைய அருமுனை. 13. மண் ஊறு - சரிந்து விழும் மண்ணினால் வரும் ஊறு.

உள்ளுறை: 'ஒடை நீருண்டு இன்புற்றபின், அதனின்றும் கரையேற மாட்டாது முடம்பட்ட, உரனுடைய பகட்டினைப் போலத், தலைவியுடன் களவின்பத்திலே ஈடுபட்டு, அதனை விட்டு அவளை வரைந்து கொள்ள மாட்டாது போயினை. பகட்டிற்கு, இருப்பைப் பூவை உதிர்த்து, மானினங்களை வெருட்டிச், சிறுவர் உணவூட்டுவது போலத் தலைமகளைச் சுற்றத்தினின்றும் பிரித்து, அயலார் வரைவினையும் மாற்றி, நின்னுடன் உடன்போக்கிற்கு, யானோ உடம்படுத்தி நிற்கின்றேன்’ என்றனளாம்.