பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

அகநானூறு - களிற்றியானை நிரை


முயல, அவள் மனம் நொந்து, அவராவது நோயிலராக இருப்பாராக’ என வாழ்த்துகின்றனள்.)

          அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
          பழிஇலர் ஆயினும், பலர்புறங் கூறும்
          அம்பல் ஒழுக்கமும் ஆகியர், வெஞ்சொல்
          சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
          நுண்பூண் எருமை குடநாட் டன்னனன் 5

          ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
          நோய்இல ராக,நம் காதலர் - வாய்வாள்
          எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
          கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
          வள்உயிர் வணர்மருப்பு அன்ன, ஒள்இணர்ச் 10

          சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
          அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்,
          பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை,
          சினம்மிகு முன்பின், வாமான், அஞ்சி
          இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15

          நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
          நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
          கூடா மையின், நீடி யோரே!

என்றும் அழிவில்லாத விழவுப் பெருக்கத்தினையுடைய பகைவர்க்கு நினைப்பினும் அச்சம் விளைக்கும் மூதூர் இது. இதன்கண், ஏதொரு பழியும் அற்றவர்களேயாயினும், அவர் பலரையும் புறஞ்சொற் கூறுதலாகிய அம்பல் ஒழுக்கத்தினையும், வெம்மையான சொற்களையும் உடையவர், சேரிப் பெண்டிர்களுட் சிலர். அவர்கள், எம்மை எள்ளிநகையாடினாலும் எள்ளுக.

நுண்மையான தொழிற்பாடமைந்த பூணினையுடைய எருமைகள் மலிந்த, வளமிக்க குடநாட்டைப் போல்வதாகிய, என்னுடைய அழகிய நலமெல்லாம், தொலைந்து போயினும் போவதாக!

வெற்றி வாய்த்தலையுடைய வாளினையுடையவன் எவ்வி என்பான். அவன் வீழ்ந்துபட்ட போர்க்களத்திலே, பாணர்கள், கையாற்றொழுகின்ற முறைமையோடு முன்பெல்லாம் அவனைப் போற்றிப் பராவிய, வளம் பொருந்திய ஒலியையுடைய, தம் யாழின் வளைந்த கோட்டினையே மனம் வெறுத்து முறித்துப் போட்டனர். அதைப்போல, ஒள்ளிய பூங்கொத்துக்களையுடைய சுடரும் பூக்கள் மலிந்த கொன்றையினது, முறையாக விளைந்த நெற்றுக்கள், பாறைகளின் மேலாக அற்று வீழ்ந்து கிடக்கும். சுரத்தின் நீண்டு கிடக்கும் நெறியிலேயுள்ள,