பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 225


மறப்புலி உழந்த வசிபடு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணிஇய மண்டிப்,
படிமுழம் ஊன்றிய நெடுநல் யானை
கைதோய்த்து உயிர்க்கும் வறுஞ்சுனை,
மைதோய் சிமைய, மலைமுதல் ஆறே! 20

தோழி! நம் தலைவராகிய அவர், வரைந்து கொள்வதே நல்லது என்று கருதாதே அகன்றனரேனும், 'நெற்றியும் தோளும் தேமலுடைய அல்குலும் நிறமும் அழகும் வரியும் வாட வருந்துவளே இவள்' எனத் தம்பிழையினைத் திருத்தியவராகவும் கருதுவர்.

மறத்தையுடைய புலியுடனே போரிட்டு உழந்தமையினால், பிளவுபட்ட சென்னியினால் உற்ற நோயாகிய வருத்தத்துடன், நீர் உண்ணுதற்கு விரையச்சென்று, மண்ணிலே முழங்காலை மடித்து ஊன்றி, நெடிய நல்ல யானையானது, தனது கையால் சுனையினடியைத் தோய்த்து, நீரின்மையால் பெருமூச்செறியும், வறிய சுனைகளையுடைய, மேகம் படியும் உச்சியினையுடைய, மலையிடத்துச் செல்லும் வழிகள்தாம், அத்தன்மையன.

அவ்வழியினூடே செல்லும் மக்கள், அறுத்துப் போட்ட பிரண்டைக் கொடியானது, இடியால் தாக்கப்பட்டுத் துணி பட்டுக் கிடக்கும் பாம்புத் துண்டங்களைப்போல, வழிப் பக்கங்களிலே, பயனற்று வதங்கிக் கிடக்கும் காட்டுவழி அது.

'உப்பு வணிகர் விட்டுப்போன கல் அடுப்பிலே, வலிய வில்லினையுடைய மழவர்கள், நாற்றங்கொண்ட ஊனைப் புழுக்கியுண்ணும் இடங்களையுடைய சுரமானது, பெண்டி ரோடு கடந்து செல்லுவதற்கும் உரியதாகாது’ என்று, இங்ஙனமெல்லாம் நினையாது,

உள்ளத்திலே ஊக்கம் சிறந்து, நெய்தற் பூப்போலும் உருவினையும், அழகியதாகத் தோன்றும் அழகிய இலை யினையும், தொடுத்தலமைந்த மயிற்றோகையால் விளக்கமுற்ற காம்பினையும், மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும், கரிய தண்டினையும் உடைய வேலே துணையாகப், பகையைத் தணிவிக்கச் செல்லும் போர்க்களத்திற்குத் தம்மோடு யாமும் துணையாகச் செல்லவும், அவர் துணிவாரோ? -

சொற்பொருள்: 3. திருந்துபு - மீளவும் திருத்தமாக. 6. ஏறுபெறு பாம்பு - இடியால் தாக்குண்ட பாம்பு 7.திரங்கும் வாடிக் கிடக்கும். 9. நோன்சிலை - வலிய வில். 16. உழந்த போரிட்டு வருந்திய, 18 படிமுழம் ஊன்றுதல் - முழங்காலிடல். 19. வறுஞ்சுனை - வறண்ட சுனை,

உள்ளுறை: வழிச்செல்வோரால் அறுத்துப் போடப்பட்ட பிரண்டை வறிதே வாடுவதுபோல, அவரால் கைவிடப்பட்ட யானும் வாடுவேன். என் அழகும் பயனின்றிக் கழியும்.