பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

அகநானூறு - களிற்றியானை நிரை


உமண்சாத்துக் கைவிட்ட அடுப்பு, மழவர்க்கு ஊன் புழுக்கு அடுதற்குப் பயன்பட்டதுபோலத், துறக்கப்பட்ட யானும், அலர் கூறுவோர்க்கு இலக்காவேன்' எனவும்,

‘புலியோடு உழந்து வடுப்பட்ட யானை, நீருண்ணக் கை தோய்த்து நீர் பெறாது நெட்டுயிர்த்தாற்போல, அம்பற் பெண்டிரின் அலராலும், அன்னையின் கடுஞ் சொல்லாலும், நெஞ்சம் புண்ணுற்று வாடும் யாம், அது தீருமாறு தலைவனை வேண்டியும், அருள்பெறாமல் உயிர்க்கின்றோம். ஆகவே, உடன்போக்கிலேனும் அவனுடன் செல்வோம் எனவும் கொள்க.

120. அழல் தொடங்கினளே!

பாடியவர்: நக்கீரனார். திணை: நெய்தல். துறை: தோழி பகற்குறிக்கண், தலைமகளை இடத்துய்த்து வந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது.

(மாலை வேளையிலே, தலைவியைக் களவுக்குக் குறித்த இடத்திலே சேர்த்துவிட்டு வரும் தோழி எதிரே வந்த தலைவனு டன் இவ்வாறு சொல்லுகிறாள். நெய்தலிற் களவுக் கூட்டம் இது.)

          நெடுவேள் மார்பின் ஆரம் போலச்,
          செவ்வாய்வானம் தீண்டி மீன் அருந்தும்
          பைங்காற் கொக்கினம் நிரையறை உகப்ப,
          எல்லை பைப்பயக் கழிப்பிக், குடவயின்
          கல்சேர்ந் தன்றே, பல்கதிர் ஞாயிறு - 5

          மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே
          பெருநாண் அணிந்த நறுமென் சாயல்
          மாண்நலம் சிதைய ஏங்கி, ஆனாது
          அழல்தொடங் கினளே - பெரும; அதனால்
          கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி 10

          நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து, அசைஇ,
          வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது
          சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ -
          பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
          அன்றில் அகவும் ஆங்கண், 15

          சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே!

முருகக் கடவுளின் மார்பினிடத்தே விளங்கும் ஆரத்தைப் போலச் செவ்வானத்திலே பொருந்தி மீனை அருந்தும் பசிய கால்களையுடைய கொக்கினம், வரிசையாகப் பறத்தலை விரும்பி மேலெழுந்திடப், பகற்பொழுதை மெல்ல மெல்லக் கழித்துப், பல்கதிர் ஞாயிறும் மேற்றிசையிலே மலைவாயிலிற் சென்று சேர்ந்துவிட்டது.