பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 229



பிற்சேர்க்கை - 1

பாடினோர் வரலாறு

(நக வளைவுக்குறியினுள் குறிக்கப்பட்டுள்ள எண்கள் இந் நூலின்கண்ணுள்ள செய்யுட்களைக் குறிக்கும்.)

அந்தி இளங்கீரனார் (71)

'அந்தில் இளங்கீரனார்' எனவும் இவரைக் குறிப்பிடுவர். பணக்காரர்களை ஒட்டி வாழ்ந்து, அவரிடம் பணங்குறைந்தால், அடுத்தவரிடம் சென்று வாழ்கின்ற மக்களை, நயனின் மாக்கள்’ என்று கூறும் இவர் வாக்கு சிந்திக்கத்தக்கது. கோவை மாவட்டத்துள் 'அந்தியூர்' என்ற ஊரும், 'அந்தி நாடு’ என்று திருவாங்கூர்க் கொச்சியிலே ஒருரும் உள்ளது. இவ்வூர்களுள் யாதாயினும் ஒன்றைச் சேர்ந்தவராகவும் இவர் இருக்கலாம். ஆனால், இவருடைய பாடலுள், 'வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப' என்று கூறிய நயத்தை ஒட்டியே, இப்பெயரைப் பெற்றனர் எனவும் கூறுவர் (அகம் 71). இளங்கீரனார் என்பாரும் உள்ளனராதலின், இவர்க்கு இந்த அடைமொழி தந்தனர். 'கீரர்’ என்போர் சங்கறுக்கும் குலத்தினர்; நக்கீரனார்போல இவரும் அக்குடியினரேயாவர். இவர் பாடியதாகக் கிடைத்துள்ளது இவ்வொரு பாடலே.

அம்மூவனார் (10, 35)

அகநானூற்றுள் 6 பாடல்களும், ஐங்குறுநூற்றுள் நெய்தல்பற்றிய (101-200) நூறு பாடல்களும், குறுந்தொகையுள் 11 பாடல்களும், நற்றிணையுள் 10 பாடல்களும் இவர் பாடியனவாகக் கிடைத்துள்ளவை. பெரும்பாலும் நெய்தல் திணையினையே இவர் விதந்து பாடியுள்ளனர் எனலாம். சேரன், பாண்டியன் ஆகியோராலும், திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரியாலும் ஆதரிக்கப்பெற்றவர் இவர் என்றும் கருதலாம். இவரால் சிறப்புடன் பாடப் பெற்ற பட்டினங்கள், தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் என்பவையாம். 'கடலினும் நட்புப் பெரியது' (ஐங். 184) என்ற இவரது கருத்தின் சிறந்த நயம் காண்க. மிகவும் சுவையமைந்த சிறந்த பாடல்கள் இவர் பாடியவை அனைத்தும். 'அம்மு' என்ற பெயர் இந்நாளிலும் சேர நாட்டிலே வழக்கிலிருப்பது கொண்டு, இவரையும் சேர நாட்டவர் எனச் சிலர் கருதுவர். இந்நூலுள் இவர் பாடியன நெய்தல்பற்றிய பத்தாவது செய்யுளும், பாலை பற்றிய 35 ஆவது செய்யுளும் ஆகும். இரண்டினுள்ளும் வளங்கெழு தொண்டியினைப் பெண்ணின் நலனுக்கும்

16