பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 233



உலோச்சனார் (20, 100)

இவர் பாடியவை குறு. 4, நற். 20 அகநா. 8. புறநா. 3. ஆக 35 பாடல்கள். இவர் நெய்தல் நிலத்தைச் சிறப்பித்துப் பாடியவர். கடலில் உப்பு எடுத்தலை, 'வானம் வேண்டா உழவு’ என்று சிறப்பித்துக் கூறுகிறார். பொறையாற்றுப் பெரியன் என்பானையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியையும் இவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் சமணர் என்பர் டாக்டர். சாமிநாதய்யர் அவர்கள். நெய்தல் நிலப் பெண்களின் விளையாட்டுக் களையும் (20). புறந்தைப் பெரியனின் பாசறைச் சிறப்பினையும் (100), இவர் இந்நூலுட் பாடியிருப்பக் காணலாம். 'புறந்தை' தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையூராகிய பொறையாறு என்பர். இப்புலவர் சோணாட்டினர்; பெரியனால் ஆதரிக்கப் பெற்றவர்.

உறையூர்ச் சல்லியன் குமரனார் (44)

உறையூர்ச் சல்லியன் மகனார் இவர். குறுந்தொகை 309 ஆவது செய்யுள் இவர் பாடியது 'வயலில் பூத்த நெய்தலைக் களை பறிப்பார் களைந்து வரப்பில் போட்டாலும், அது மீண்டும் மீண்டும் அதன்கண் முளைப்பதுபோல, யாமும் நின்னால் ஒதுக்கப்பட்டாலும், நின்பால் என்றும் மாறா அன்புடையோம்' என, இவர் கூறும் உவமை சிறப்புடையது. இவர் இந்நூலின் 44 ஆவது பாடலைப் பாடியவர் என்று ஒரு பாடமும் வழங்குகிறது. சோழ நாட்டு அரிசிலாற்றையும், அதனருகேயுள்ள அம்பல் என்னும் ஊரையும், கிள்ளிவளவனையும் இவர் நற்றிணை 141ஆவது பாடலுள் குறித்துள்ளனர்.

ஊட்டியார் (68)

இவர் பாடியவை இந்தச் செய்யுளும், அகநானூற்றின் 388-வது செய்யுளும் ஆகும். இரண்டும் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள். 'ஊட்டியன்ன ஒண்தளிர்ச்செயலை (60) எனவும், ஊட்டியன்ன ஊன்புரள் அம்பொடு (388), எனவும் இவரது இரு செய்யுட்களுள்ளும் வரும் தொடர்களைக் கொண்டு, இவர் 'ஊட்டியார்’ எனப் பெற்றனர். இரவுக் குறிக்குச் செல்லும் கன்னியர், தம் அன்னையர் உறங்கிவிட்டனரா எனக் காணுகின்ற தன்மையினை இப்பாடலுள் காணலாம்.

எயினந்தை மகனார் இளங்கீரனார் (3)

இவர் இளங்கீரனார் எனத் தனியாகவும் குறிப்பிடப் பெற்றுள்ளனர். பொருந்தில் இளங்கீரனார் என்பவரினின்றும் வேறுபடுத்த, இவரை 'எயினந்தை மகனார்’ என்ற அடைமொழியிட்டு வழங்கினர் போலும். இவர் வேட்டுவக் குடியினர். மக்களின் பழக்கவழக்கங்களை ஊன்றியுணர்ந்து தம் பாடல்களுள் அமைத்தவர். இவர் தந்தையாராகிய எயினந்தை