பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

அகநானூறு - களிற்றியானை நிரை

செகாஅர் விட்டகல் தப்பற்குப் பெருங்களிற்று மருப்பொடு வரியதள் தண்டம் விதிக்கும், கொடிய வேந்தனைப்பற்றி இவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு கடுமையான செய்தியைத் தொடுத்துக் கூறியமையால் இவர் இப்பெயர் பெற்றனர் போலும். காவினார்’ என்ற சொல்லும், மேற்காட்டிய இவர் வாக்கும் இவர் கானப் பகுதியினைச் சார்ந்தவர் எனக் காட்டுவன.

கணக்காயனார் மகனார் நக்கீரனார் (93)

நக்கீரனார் என்ற பகுதியிற் காண்க.

கபிலர் (2, 12, 18, 42, 82, 118)

இவர் வேள்பாரியின் சிறந்த நண்பராக விளங்கியவர். பதிற்றுப்பத்துள் ஏழாம்பத்தைப் பாடிச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் பெரும்பரிசில் பெற்றவர். பத்துப் பாட்டின் குறிஞ்சிப்பாட்டும், கலித்தொகையுள் குறிஞ்சிக் கலியும், ஐங்குறுநூற்றுள் குறிஞ்சிபற்றிய நூறும், இவர் இயற்றியவை. பரணர், இடைக்காடர் ஆகியோர் இவரது உற்ற நண்பர்கள். அகுதை, இருங்கோவேள், ஒரி, சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, காரி, விச்சிக்கோன், பாரி, பேகன் ஆகிய பலர் இவராற் பாடப் பெற்றவர். அந்தணாளன் கபிலன்' எனலால், இவர் அந்தணர் மரபினர் எனலாம். இவர் வேறு; தொல் கபிலர் வேறு. 12ஆம் பாடல் தொல்கபிலர் பாடியது எனவும் பாடம் உரைப்பர். இவர் பாரிவேளின் சிறந்த நட்பினராயிருந்து, அவன் இறந்தபின் அவன் மக்களைப் பேணி மண முடித்து வைத்துப், பின் வடக்கிருந்து உயிர்நீத்த, நட்புப் பெருஞ்சிறப்பும் உடையவர்.

கயமனார் (7, 17)

இவர் பாடியன அகத்துள் 12, குறுந்தொகையுள் 4, நற்றிணையுள் 6, புறத்துள் 1, ஆக 23 பாடல்களாகும். குறுந்தொகையின் ஒன்பதாவது செய்யுளிலே,

          'பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
          இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்
          கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்'

என்றுரைத்த உவமை நயம்பற்றிக் கயமனார் எனப்பட்டனர். இவர் பாடல்களுள், புலம்பலே மிகுதியாகக் காணப்பெறும். அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலையிலே வெற்றிகொண்டு, திதியனின் காவன்மரமாகிய புன்னையை வெட்டினான் என்ற செய்தி (அகம் 145-வது பாடலுள்) இவராற் குறிக்கப் பெற்றுள்ளது. பொதுவாகப் பாடல்கள் அனைத்துமே நேர்முகமாகக் கூறுவனபோல அமைந்து விளங்குவதனால்,