பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 237


மிகவும் உள்ளம் உருக்குவனவாக உள்ளன. தாய்மையின் பாசம் மிகவும் சிறப்பாக இவர் பாடல்களுள் மிளிரக் காணலாம். பெண்கள் பந்தாடுதல், உமணர் பகடுபூட்டிய வண்டியிற் செல்லுதல், ஊர்களில் விழாக்கள் நடத்தல், முதலிய பல அக்காலத்துச் செய்திகளையும் காணலாம்.


'பால்பெய் வள்ளம் சால்கை பற்றி
என்பாடு உண்டனை யாயின் ஒருகால்
நுந்தை பாடும் உண்ணென்று'

மகளுக்குச் சோறுட்டும் தாயன்பினை எங்ஙணம் போற்றுவது! முதுகுயவர்கள் அம்மன் கோயில் பூசாரிகளாக விளங்கிய செய்தியைக் (நற்றிணை 293 ஆம் பாடலுள்) குறித்துள்ளார். இந்நூலினுள் (7-வது பாடல்) பெண்கள் பேதைப்பருவங்கடந்து பெதும்பைப் பருவத்துக் கால்வைக்கும் மலர்ச்சியை அழகுடன் கூறியுள்ளார்.

கருவூர்க் கண்ணம் புல்லனார் (63)

இவர் பாடியவை அகம். 68, நற். 159 ஆக இரண்டு செய்யுட்கள். கண்ணன் தந்தை பெயர். புல்லன் இவர் பெயர். கருவூரினர் இவர். கள்ளிக்குடிப் பூதம் புல்லனார், பூதம் புல்லனார், மதுரைக் கொல்லன் புல்லன் எனப் புல்லன் என்ற பெயருடையார் இவரோடு நால்வர். இப்பாடலுள், 'கன்று காணாது புன்கண்ண’ என்று வரும் தொடரால் இவர் இப்பெயர் பெற்றனர் எனவும் கருதலாம்.

கருவூர்ப் பூதஞ்சாத்தனார் (50)

சேரர் கோநகராகிய கருவூரினர் இவர் கருவூர்ப் புலவர்கள் பலர். கருவூர்ச் சேரமான் சாத்தன் வேறு, இவர் வேறு. 'சாத்தன்' என்ற பெயருடைய புலவர் பலருள் இவரும் ஒருவர். சாத்தனார் இவர் பெயராகவும், 'பூதன்' இவர் தந்தை பெயராகவும் கொள்ளலாம். இந்நூலுள் இவர் பாடிய பாடல் நெய்தல் பற்றியது. 'மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்’ எனக், கண்நிறை நீர்கொடு சுரக்கும் தலைவியின் கசிந்த உளத்தினை இதனுட் காணலாம்.

கல்லாடனார் (9, 83, 113)

அகநானூற்றுள் 7-ம், குறுந்தொகையுள் 2-ம், புறநானூற்றுள் 5-ம் ஆக, இவர் பாடியவை 14 பாடல்கள், இவராற் பாடப்பெற்றோர் அம்பர்கிழான் அருவந்தை, முள்ளுர் மன்னன் காரி, ஒரி, அஃதை, பாண்டின் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வேங்கட மலைத் தலைவனான கள்வர் கோமான் புல்லி, பொறையாற்றுக்கிழான் பெரியன்,