பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அகநானூறு - களிற்றியானை நிரை


சிதைக்கும் வண்ணம் நிரைநிரையாகக் கிடக்கும் பாதை அது. பரல்கள் நிரம்பிய வன்னிலமாகிய, எவ்வகைத் தாவரங்களும் தோன்றுதல் இல்லாத அத்தகைய கானத்தையும் கடந்து செல்ல எண்ணுவீர். ஆனால், "காதலித்தாரைப் பிரிதல் அறநெறிப் பட்டதன்று என்று சொல்லப்படுகின்ற பழைமையான முதுமொழியானது வெறும் பேச்சாகவே சொல்லப்பட்டுக் கழிக" என்று சொல்பவளே போலக் குறிப்புக்களால் முற்படக் காட்டினள். முகத்தோற்றத்தாலும் உரைத்தனள். அந்த ஒரு நினைவையே தன் உள்ளத்தில் மேற்கொண்டு, ஒவியப்பாவை போல நின்றனள். கண்ணின் பாவையையும் மறைத்த கண்ணிர் நிரம்பிய பார்வையுடன், தன் மார்பகத்தே அணைத்திருந்த எம் புதல்வனது சிறு குடுமியிலே சூட்டியிருந்த, தூயநீர் சொட்டிக் கொண்டிருந்த, இளைப்பூக்களால் தொடுக்கப் பெற்ற செங்கழுநீர் மாலையை மோந்தனள். மோந்து அவள் பெருமூச்சு விட்டபோது, அந்தப் பெரிய மலர்கள் பவளம்போன்ற தம் அழகிய உருவினை அந்நிலையே இழந்து போயின. பொலிவு அழிந்து வாடிய 'அவற்றின் தோற்றத்தையும் கண்டேன். அதன்மேல் போவதையும் விலக்கினேன். ஒள்ளிய தொடியணிந்த அவள், யாம் அருகிலே உள்ளபோதும் அங்ஙனமெல்லாம் வாடினாள். நாம் பிரிந்தோம் என்றால், பிழைத்திருக்கவே மாட்டாளே!

சொற்பொருள்: 1. பொறாது அமரிய - பொறாமை யாலே மேவின. தமியள் - நாண் முதலாகிய குணங்கள் ஒழியத் தானே யாதலும் ஆம். 5. வறிது - சிறிது. 13. பாத்தி அன்ன பகுத்து வைத்தால் ஒத்த 14. நிரைநிலை அதர - கல்லொழுங்குபட்ட நிலைமையையுடைய வழிகள். 19. முன்னம் - குறிப்பு. 21. பாவை - கண்ணிற் பாவை, 23 பிணையல் - செங்கழுநீர் மாலை.

6. கற்பின் புதல்வன் தாய்!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனுக்குக் கிழத்தி கூறியது. சிறப்புற்றோர்: ஐயை என்பாளின் தந்தையான உறையூர்த்தித்தனும், கழாஅர்த் தலைவனான மத்தியும்.

(ஒரு தலைவன், பரத்தை ஒருத்தியுடன் தொடர்பு கொண்டு கூடி இருந்துவிட்டு, மீண்டும் தன் வீடு திரும்புகின்றான். அவன் இல்லக் கிழத்தி, அவனது செயலை வெறுத்தவளாக அவனுடன் ஊடிக் கூறுவதாக அமைந்தது இது)

          அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை,
          அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை,
          இழையணி பனைத்தோள், ஐயை தந்தை,