பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 249


மதுரை நக்கீரர் (36)

இவரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் ஒருவரே எனவும், வேறுவேறானவர் எனவும் கூறுவர். வரலாறு, நக்கீரனார் என்ற பகுதியுள் காண்க.

மதுரையாசிரியர் நல்லந்துவனார் (53)

இவர் கலித்தொகையைத் தொகுத்து, அதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடியதுடன், நெய்தற் கலியினையும் பாடியவர். பரிபாடல்களுள் 6,8, 11, 20 ஆகியவையும் இவர் பாடியவை.


'அளியரோ அளியர் தாமே அளியின்று
ஏதில் பொருட்பிணிப் போகித் தம்
இன்றுனைப் பிரியும் மடமை யோரோ'

எனத் தலைமகன் சொல்வதாக இவர் கூறும் அகப்பர்ட்டின் (54) தொடர்களும், கலியுள் இவர் கூறும் பலப்பல கருத்துக்களும், சிறந்த சுவையும் கருத்தாழமும் உடையனவாகும். 'அந்துவன்’ என்ற பெயருடையாருள் இவரும் ஒருவர். அந்துவன் சேரல் என்பான் இரும்பொறை மரபினனான சேரமான் ஆவன்.

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (58)

மதுரையிலே பலசரக்கு வாணிகம் செய்துவந்தவர் இவர். 'தேவனார்'. இவர் பெயர். இளந்தேவனார் என்பது, பெருந் தேவனாரிலும் வேறுபடுத்தக் கூறியது. இவர் பாடியவை அகம். 58, 328, நற் 41 ஆகியவை. 'உன்னைத் தழுவுவதிலும் உன்னை நினைந்து காத்திருப்பதே இனிமையுடையது' என்னும் பொருள் படத் தலைவி ஊடிக் கூறுவதாக இவர் கூறுவது நயமான கருத்தாகும்.

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (92)

'பாலாசிரியர்' என்பது இவருடைய தொழில் ஆகும். பெயர் நற்றாமனார். இவர் பாடியது இந்த ஒரே செய்யுளே. இதன்கண் யானைக்குக் 'குஞ்சரம்' என்ற சொல்லினை இவர் வழங்கியுள்ளார்.

மதுரைப் பேராலவாயர் (87)

பாடியன நற்றிணையுள் 2, அகத்துள் 2, புறத்துள் 2 ஆக ஆறு பாடல்கள். இவரே இறையனார் எனவும் சிலர் கருதுவர். பாண்டியனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தவர் இவர்.

மதுரைப் போத்தனார் (75)

இவர் பாடிய செய்யுள் இது ஒன்றேயாகும். பாலைத் திணைச் செய்யுள் இது. 'போத்தன்' என்பது இவருடைய இயற்பெயர்.பிற்காலப் பல்லவர்களுடைய சிறப்புப் பெயர்களுள்