பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 251


என்பவர் இவரே எனவும் கருதுவர். மருதத்தைச் சிறப்பித்துப் பாடியவர். நற்றிணையுள் ஒன்றும், அகத்துள் இரண்டுமாக மூன்று பாடல்கள் இவர் பாடியவை. அகுதையின் தந்தையான சோழர், பருவூர்ப் போர்க்களத்தில் செய்த போர் இவரால் இப்பாடலுள் குறிக்கப் பெற்றுள்ளது.

மாமூலனார் (1, 5, 13, 55, 61, 65, 91,97, 101, 115)

இவர் அந்தணர் மரபினர். முக்காலமும் உணர்ந்த யோகசித்தி உடையவர். திருமந்திரம் எழுதினோரான திருமூலர் வேறு ஒருவர். இவருடைய பாடல்கள் அனைத்தும் யாதாயினும் ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூறும் சிறப்பு உடையன. இவரால் சிறப்புடன் பேசப்பட்டோர் பலர். இவர் மோரியரைக் குறித்துப் பாடியுள்ளனராதலின் கி.மு. 260-க்கு முற்பட்டவர் எனக் கருதுவர். இவராற் பாடப்பெற்றோர் வேங்கடமலைத் தலைவனான புல்லி, நெடுவேளாவி, நன்னன், நன்னன் வேண்மான், கட்டி, எருமை, அஞ்சி, கண்ணன், எழினி, பாணன், கரிகால் வளவனோடு போரிட்டுப் புறப்புண்பட்டு வடக்கிருந்து மாண்ட பெருஞ்சேரலாதன், மத்தி, உதியஞ்சேரலாதன், குட்டுவன், கோசர், மழவர், நந்தர், வடுகர், வேளிர் ஆகியோர். களிற்றியானை நிரையுள் இவர் இயற்றியனவாக விளங்கும் பாடல்கள் பத்து. இவையனைத்தும் பாலைத்திணைப் பாக்கள் ஆகும். இவற்றுள் 97வது பாடலை ஒளவையார் பாடியதாகவும், குடவுழுந்தனார் பாடியதாகவும் வேறு பாடங்களும் கூறப்படும். இவையன்றியும், மணிமிடை பவளத்துள் பத்துப் பாடல்களும், நித்திலக் கோவையுள் 7 பாடல்களும் அகநானூற்றுள் இவர் பாடியன. ஆக, அகநானூற்றுள் மட்டும் இவர் பாடியவை 27 பாடல்கள். குறுந்தொகை 11-வது பாடலும், நற்றிணை 14,75-வது பாடல்களும், திருவள்ளுவ மாலையின் 'அறம் பொருள் இன்பம்' என்ற செய்யுளும் இவர் செய்தவையாகக் காணப்படுபவையாம்.

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் (54)

மாற்றூர் என்ற பெயருடன் பலவூர்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றைச் சார்ந்தவர். காவிரியின் வடகரையிலுள்ள சிறுகுடியின் கண் விளங்கிய பண்ணனை இவர் பாடியுள்ளார். கொற்றங் கொற்றனார் என்ற பெயர் போர் வெற்றிச் சிறப்பைக் குறிப்பிடுவதும் காண்க. சிறுவர்களுக்குப் பொற்றாலி அணியும் வழக்கத்தை இப்பாடலுள் காணலாம். 52-வது பாடலும் இவர் பாடியதே என்பது மற்றொரு பாடமாகும். இராமநாதபுரத்துப் படுமாற்றுார் படமாத்துார் . இவரது மாற்றூராகவும் இருக்கலாம்.