பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 13




          மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்
          பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் - 5

          கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
          குழைமாண் ஒள்ளிழை நீவெய் யோளொடு,
          வேழ வெண்புணை தழீஇப், பூழியர்
          கயம்நாடு யானையின் முகனமர்ந் தாங்கு,
          ஏந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய, 10

          நெருநல் ஆடினை, புனலே, இன்றுவந்து
          'ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்,
          மாசில் கற்பின், புதல்வன் தாய்'ன்ன,
          மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி,எம்
          முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! 15

          சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்து
          அம்தும்பு வள்ளை ஆய்கொடி மயக்கி,
          வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்,
          முள்ளரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
          பல்வேல் மத்தி, கழாஅர் அன்னஎம் 20

          இளமை சென்று தவத்தொல் லஃதே;
          இனிமைஎவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

உள்ளிடு பரல்கள் பெய்த சிலம்பினையுடையவள்; நீராம்பலால் தொடுக்கப்பெற்ற மாலையினை அணிபவள்; அரத்தால் போழ்ந்து அழகியதாகச் செய்த வளைகளால் அழகு பெற்று விளங்கும் முன்கையினை உடையவள்; ஆபரணங்கள் அணிந்திருக்கும் பணைத்த தோள்களையும் உடையவள் ஐயை என்பவள். அவளின் தந்தை, மழை வளத்தினைப்போல வரையாது வழங்குகின்ற, பெரு வண்மையினையுடைய சித்தன் என்னும் சோழ மன்னன். நெற்குவியல்கள் நிறைந்திருக்கின்ற, அவனுடைய கோநகராகிய உறையூரினிடத்தே:

ஒடக்கோலும் நிலைபெறாத அளவுக்குப் பெருகியோடும் காவிரியின் புதுநீர்ப் பெருக்கிலே மாட்சிமையுடைய குழையுடன் பிற ஒளிரும் ஆபரணங்களையும் அணிந்த வெய்ய தன்மையினளான பரத்தை ஒருத்தியுடன், வேழக் கரும்பாலாகிய வெண்மையான தெப்பத்திலே, பூழியர்களின் குளத்தினை விரும்பிச் செல்லுகின்ற யானையின் முகமலர்ச்சிபோல முகத்திலே களிப்புடையவனாக, அழகுமிகுந்த நின் மார்பகத்துக் கிடந்த பூந்தாரும் குழையுமாறு, அவளைத் தழுவியவனாக, நேற்று நீ புனலாடினை!