பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 257


புலவர்களாற் போற்றப்பெறும், 'ஓம்பா ஈகை மாவேள் எவ்வி’ என வள்ளன்மை பேசப்படும், குடவாயிற் கீரத்தனார், வெள்ளெருக்கிலையார் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர். அன்னி என்பவன் இவன் நண்பன். அவன் திதியனோடு வம்பாகப் போரிடமுயன்றபோது, நயம்புரிநன்மொழி கூறி அடக்க முயன்ற அறநெறியாளன் எவ்வி. இவன், இறுதியாகத் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் வென்று அழிக்கப்பட்டனன். இறந்தபோது, பாணர்கள் மனம் நொந்து, தம் யாழ்களையே முறித்துப் போட்டனர் என்கிறார் வெள்ளெருக்கிலையார்.

எழினி (105)

இவன், 'மறமிகு தானைக் கண்ணன் எழினி தேமுதுகுன்றம்' என்றதனால், முதுகுன்றப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் என்க. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனோடு தலையாலங்கானப் போரிலே மற்றையோருடன் கூடிப் போரிட்டுத் தோற்றவன் இவன். பின்பொருகால் மத்தி என்பவனால், 'கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய வன்கட்க தவின் வெண்மணி வாயில்' (அகம் 21) என்றாற் போல, அழிக்கப் பெற்றவன். சோழர் படைத்துணைவர்களுள் ஒருவனாகத் திகழ்ந்தவன். இவனும் தகடூர் ஆண்ட எழினியரும் வேறாவர்; வாட்டாற்று எழினியாதன் என்பானும் வேறாவன்.

ஏற்றை (44)

சேரர் படைத்தலைவருள் ஒருவன். சோழரை எதிர்த்து நடைபெற்ற கழுமலப் போரிலே வீழ்ந்து பட்டவன். குறவர் குடித் தலைவனாக விளங்கிக், குறமகள் இளவெயினியாரால் பாடப்பெற்ற ஏறைக்கோனே இவன் எனவும், சிலர் கருதுவர்.

ஐயை (6)

இவள் 'தித்தன்' என்னும் சோழனின் மகள். இந்தத் தித்தன் பிடவூர்க்கிழான் சாத்தன் என்பானின் காலத்தவன், நக்கீரர் பாடியுள்ளதனால், தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் காலத்தவனுமாவன். இவளுடைய உடன் பிறந்தவனே போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்பவன்.

கங்கன் (44)

இவனும் சேரர் படைத்தலைவனாக இருந்து கழுமலப் போரிலே பழையனால் வெல்லப்பட்டவருள் ஒருவன். சோழன்மீது பகைகொண்டு, அவனை எதிர்த்து, அந்த முயற்சியிலே வீழ்ந்தவன். இவன் பெயரைக் கொண்டு இவனை வட நாட்டைச் சேர்ந்தவன் எனவும் சிலர் கருதுவர்.