பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

அகநானூறு - களிற்றியானை நிரை


கடலன் (81)

இவன், விளங்கில் என்னும் ஊரின்கண் இருந்து அரசாண்ட ஒரு குறுநிலத் தலைவன். இவனைப் பாடியவர் ஆலம்பேரிச் சாத்தனார் என்பவர். அவர் மதுரையைச் சார்ந்த ஆலம்பேரி என்னும் ஊரினராவர். எனவே, இக் கடலனது விளங்கிலும் பாண்டிநாட்டுள் ஒருராயிருத்தல் பொருந்தும். விளாங்குளத்துர், விளாம்பட்டி என்ற பாண்டி நாட்டு ஊர்களுள் யாதாயினும், இவனுராயிருக்கலாம். பகைவரது போர்க்களத்திலே புகுந்து, களிறுகளை வேலெறிந்து வெல்லுதலிலே சிறந்த மறவன் இவன். அத்துடன் பெருவள்ளன்மை உடையவனாகவும் விளங்கினான். இவனைப்பற்றிய செய்தியைக் கூறுவது இந்நூலுள் 81-வது செய்யுளாகும்.

கட்டி (44)

இவன் வமிசத்தாரே சேலம் மாவட்டத்துத் தாரமங்கலக் கோயிலைக் கட்டிய கட்டிமுதலி இனத்தவராவர். இவன் பவானியாற்றுப் பகுதியிலே அரசாண்டவன். உறையூரிலே தித்தன் அரசாண்டகாலத்து, அவனை மற்போரில் வெல்ல முயன்று பின்னிட்டவன். பின்னர், சேரருக்குப் படைத் துணையாகக் கழுமலப் போரிலே ஈடுபட்டு, அதிலும் தோற்றவன்.

கணையன் (44)

சேரர் படைத்தலைவருள் ஒருவன். கழுமலப் போரிலே வீழ்ந்து பட்டவன். இவனைச் சேரர் படைமுதலி எனவும் அழைப்பர். சோழர் படைமுதலியாக இருந்த பழையன்பட்டதும், பெரும்பூட்சென்னி சினந்தெழுந்து, இவனை அழித்தான் என, இப்பாடல் கூறும்.

கரிகால் வளவன் (55)

இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் புதல்வன். பொருநராற்றுப்படைக்கும், பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவன். இரும்பிடர்த் தலையாரை அம்மானாகப் பெற்றவன். வெண்ணிப் பறந்தலையிலே சேரமான் பெருஞ்சேரலாதனோடு போரிட்டு, அவனையும், அவனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் வென்றவன். இந்தச் சேரமானே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இப்போரில் தோற்ற சேரலாதன், புறப்புண்பட்டு நாணி, வடக்கிருந்து உயிர் துறந்தான். இவ்னைப் பாடியோர் கருங்குழலாதனார், வெண்ணிக் குயத்தியார், கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆகியோர்.