பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

அகநானூறு -களிற்றியானைநிரை


இந்நூலினுள் (அகம். 77) இவனைப்பற்றிய செய்தியைக் கூறுபவர் மதுரை மருதன் இளநாகனார் ஆவர். போர் முனையிலே அவன் உயர்த்த வேல் மாற்றார்க்குத் துயர்தரும் சிறப்பு, இதன்கண் உரைக்கப்படுகிறது.

புல்லி (61, 83)

இவன் கள்வர்கோமான் புல்லி எனப் பேசப்படுபவன். வடவேங்கடத்தை உள்ளடக்கிய பகுதிக்குத் தலைவனாயிருந்தவன். பாலைபட்டுக் கிடந்த அந்நிலப் பகுதியிலே ஆறலைத்து உண்ணும் வாழ்வினராயிருந்த கள்வர்களின் கோமானாக இவன் விளங்கினான். பாண்டியர்களோடு இவன் தொடர்புடையவனாயிருந்ததுடன், அவர்களுடைய போரணிகட்கு வேண்டிய யானைகளையும் அனுப்பி வந்தவனாவான் (அகம் 27). இவன், தன்னைப் பாடிவந்த பரிசிலர்களுக்கு வாரி வழங்கியன். அதியன் தலைவனாகிப் பேராண்மையுடன் திகழ்ந்த மழவரினத்தை ஒரு சமயம் வெற்றி கொண்டு, தன்னைப் பணிந்து வாழவும் செய்தவன் இவன். 'பொய்யா நல்லிசை மாவண் புல்லி' (அகம். 359) எனவும், 'நெடுமொழிப் புல்லி’ எனவும் இவன் புலவர்களால் போற்றப்பட்டனன். இவனைப் பாடியோர் பலர். அவர்கள், கல்லாடனார், மாமூலனார் முதலியோராவர். அதனால், இவனும் அவர்கள் காலத்தைச் சேர்ந்தவன் என்று நாம் கருதலாம். இவன் நாடுவளம் மிக்கது. களிற்றுவேட்டையும், கள்ளுண்ட களிப்புமாக எந்நாளும் மகிழ்வுடன் விளங்குவது.

புன்துறை (44)

இவனும் சேரர் படைத்தலைவர்களுள் ஒருவன். கழுமலப் போரிலே பழையனால் வெல்லப்பட்டவன்.

பெரியன் (100)

தஞ்சை மாவட்டத்துக் காவிரிப்பூம்பட்டினத்துக்குச் சிலகல் தொலைவிலே, கடற்கரையை ஒட்டியிருக்கும் பொறையாறு என்னும் ஊரிலிருந்து அரசாண்ட குறுநில மன்னன் இவன். 'நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப்பெரியன், கட்கமழ் பொறையாறு' என்று, இவன் ஊரைச் சிறப்பிப்பர். இவன் விளைவயல்களை, 'வளம்சால் துளி, பதனறிந்து பொழிய, வேலி யாயிரம் விளைக நின் வயலே' என்று வாழ்த்துகின்றனர் புலவர்கள்.

பெருஞ்சேரலாதன் (55)

கரிகாற் பெருவளத்தானோடு வெண்ணிப் பறந்தலையிலே போரிட்டவன் இவன். போரிலே தோற்றதோடு புறப் புண்ணும் பெற்றவன். அதனால் நாணமுற்று வடக்கிருந்து உயிர் நீத்தவன். இவனே இமயவரம்பன் என்பர் அறிஞர்.