பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அகநானூறு -களிற்றியானைநிரை



இன்றோ, இவ்விடத்தே வந்தனை; “மதர்த்த கொங்கைகளையும், மார்பகத்துப் படர்ந்த தேமலினையும், குற்றமற்ற கற்பினையும் உடையவளே! எம் புதல்வனை ஈன்ற தாயே" என்றெல்லாம், மாயமான பல பொய்ம்மொழிகளை, மிகப் பணிவோடும் எம்பாற் சொல்லினை. எமது முதுமையினைச் சுட்டிப் பேசி ஏதும் நீ இகழ்தல் வேண்டாம். அஃது எமக்கு மிகவும் பொருந்துவதேயாகும்.

தீச்சுடர்போல விளங்கும் அழகிய தாமரை மலர்களையுடைய, நீர்வளம் மிகுந்த வயல்களிலே, அழகிய உள்துளையினையுடைய வள்ளைக் கொடிகளை உழக்கிக் கொண்டு, வாளை மீனைத் தின்னும் கூர்மையான பற்களையுடைய நீர்நாய். பின்னர், முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரப்பஞ் செடியின் பழைய புதரிலே சென்று தங்கும். அத்துனை நீர்வளம் மிகுதியுடையது, மத்தி என்பானது வேல் வீரர் பெருக்கத்திணை உடைய 'கழார்' என்னும் ஊர். அந்த ஊரினைப் போன்று, எம்முடைய இளமையும் எம்மை விட்டுச் சென்று நாட்கள் பலவாயின. நின்னுடைய, இப்போதைய பொய்ம்மொழிகள் தாம், எமக்கு, இனி எங்ஙனம் இனிமை செய்யப்போகின்றன? எனவே, இங்கிருந்து அகன்று, அவளிடத்தேயே நீயும் போய்விடுக!

சொற்பொருள்: 2. வளைப் பொலிந்த - வளையலால் அழகுற்ற, 6. கழை-ஒடக்கோல். வேழம் வேழக் கரும்பு.9.யானை எனவே, பிடியும் அடங்கும். அதுபோல, அவனை யொத்தே அப்பரத்தையும் மகிழ்வுடன் புனலாடினாள் என்க. 14. மாயம் - வஞ்சனை. பயிற்றி - பலகாற் சொல்லி. 15. புதல்வன் தாய்’ என்றதனைத் தன் முதுமையைக் காட்டி இகழ்வதாகக் கொண்டனள். 19. அரில் - பிணக்கம்

விளக்கம்: பெண்மையின் சிறப்பைக் கூறுபவள், ஐயையால் சிறப்புற்ற தித்தன் என்றாள். நீர்நாயின் உவமை, தாமரை மலர் போன்ற இனிதானதை விட்டு வாளைமீனை நச்சித் திரியும் அதன் இயல்புபோல, நீயும் நின் காதன் மனைவியான எம்மை விட்டுப் பரத்தையை நாடிச் சென்று இன்புற்று வருகின்றனை என்பதாம். வள்ளைக் கொடிகளை உழக்கியது போலப் பரத்தையின் தாய் முதலியோரை அவரறியாதே பரத்தையைக் கொள்வது மூலம் கலங்கச் செய்தனை என்பதாம். பிரப்பந் தூரிலே நீர்நாய் சென்று தங்குவதுபோல, நீயும் தங்குவதற்கு மாத்திரந்தானே இவண் வந்தனைபோலும் என்பது, குறிப்பு.