பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

அகநானூறு -களிற்றியானைநிரை


மேலே குறித்த எட்டுத்தொகை நூல்களுள் அகம், அகப் பாட்டு, நெடுந்தொகை என்றெல்லாம் பெயர்பெற்று வழங்குவது அகநானூறு. இதன் முதல் மூன்று பதிப்புக்கள் சேது சமஸ்தானம், மகாவித்வான், பாஷா கவிசேகர திரு. ரா. ராகவையங்கார் அவர்களால் பரிசோதிக்கப்பட்டுமுறையே, கி.பி.1920,1923,1935ஆண்டுகளில், ஸ்ரீ வத்ஸ சக்ரவர்த்தி ராஜகோபாலய்யங்கார் பதிப்பாக, வெளிவந்தன.

இவர்களின் பெரும் பணியைப் போற்றி நினைத்து வணங்கி வாழ்த்துவோமாக.

பிற்சேர்க்கை - 4

சில குறிப்புக்கள்

நெடுந் தொகையாகிய அகநானூற்றைத் தொகுத்தவர், உப்பூரி கிழார் மகனார் உருத்திர சன்மர்.

தொகுப்பித்துத் தந்தவர், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி யார் ஆவர். இவர் செய்யுள், இக் களிற்றியானை நிரையின் 26ஆம் செய்யுளாகவும் திகழ்கின்றது. இந்நூலின் தொகுப்பு முறை:

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நனிமுல்லை நாடுங்கால் - மேலையோர்
தேறும் இரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்

.

என்ற பழம் பாடலால் விளங்கும்.

'இக் களிற்றியானை நிரையுள், பாலைக்கு முதலும் கருவும் வந்து உரிப்பொருளால் சிறப்பெய்தி முடிந்தது' என்றாற்போல, அகநானூற்றின் பகுதியான இதனைத் தனிநூல் போலவே காட்டுவது நச்சினார்க்கினியனார் மரபாகும் (அகத்.3 உரை). இப் பகுப்பின் பழைமை இதனால் விளங்கும்.

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஒதாது
நின்றவற்றின் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூறு.

என்னும் பாடலும் தொகுப்பு முறையைக் காட்டுவதேயாகும். பாதிப் பாடல்கள், பிரிவுத் திணைக்குரிய பாலைப் பாடல்கள் என்பதை நினைக்கும்போது, எண்ணம் கிளர்ந்தெழும் பிரிவையே, அகத்தை விளக்கும் களனாக்குவதில் புலவர் நிறைவுபெற்றனர் என்று கருதலாம். இதனை நடுநிலைத் திணை என்று தொல்காப்பியம் அகத்திணை யியலுள் (சூ8) குறிப்பிடுவதும் சிந்தனைக்கு விருந்தாயுள்ளது!