பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அகநானூறு -களிற்றியானை நிரை


வாய்ந்த தொல்பதியான இவ்வூர்ப் புறங்கள், தாமே தாக்கி வருத்தும் பல அணங்குகளை உடையன. அதனால், நீ, இனிக் காவல் எய்தியவளாயினாய். வீட்டின் கடைவாயிலுக்கும் நீ போகாதிருப்பாயாக அறிவுள்ளவளான எம் இளைய மகளே! நீ பேதைப் பருவத்தினளும் அல்லள். அதனைக் கடந்து, பெதும்பைப் பருவத்தின் மலர்ச்சியிலே ஒதுங்கியவளாயுள்ளனை என்பதை அறிவாயாக' என்றேன்.

அதனைக் கேட்ட அவள், என் செய்தனள் தெரியுமோ?

நல்லொளி பரப்பும் சிறந்த எம் வீட்டின், அருமையுடைய காவலையும் எப்படியோ கடந்துவிட்டனள். தான் களவிலே ஒழுகிவரும் ஒழுக்கமான தன் சிதைவினை யாம் அறிந்துவிட்டோமோ எனப் பயந்தனள் போலும் இனிதாக முழங்கும் ஆண்மானையுடைய மான் இனத்தினைச் சார்ந்த, நல்ல உயிர்ப்புடன் விளங்கும் இளம் பெண்மானே! கேளாய் வலை கண்ட பெண்மான் வெருவி அயலே விரைந்து ஓடுவதுபோல இல்லினின்றும் வெளியேறிச் சென்றனள். இவ்விடத்து, ஒரு தோற்றமுமில்லாத வெள்ளிய வேலினை ஏந்திய இளைஞன் ஒருவனுடன், அவள், இந்தச் சுரத்தின் வழியாகவே வந்தனள்.

அந்த அளவே, அருஞ்சுரத்துக் கள்வர்கள் தொழுவங்களினின்றும் பசுக்களைக் கவர்ந்து செல்ல, அவரைப் பின் தொடர்ந்து வெருட்டிச் சென்று போரிட்டு, அவற்றை மீட்க விரையும் அப்பசுக்களுக்கு உரிமையுடையவர் போல, அவளைப் பின் தொடர்ந்து, அவளை மீட்டுக் கொண்டு போகக் கருதியவளாக யானும் வந்தேன். ஆயின், இதுவரை அவளையான் அணுகவும் பெற்றிலேன்.

பொன்னோடு புலிப்பல்லும் கோத்த, ஒலிக்கும் மணிகளுடன் கூடிய தாலியினை அணிந்தவள் தழைத்த அசோகின் தளிரினால் அமைந்த தழையாடையினை அணிந்தவள்; அதனால் மாட்சிபெற்று விளங்குகின்ற அல்குல் தேரினை உடையவள், பலாப் பழத்தினது கொட்டைகளை விட்டுவிட்டு, அதன் சிறந்த சுளைகளை மட்டுமே உண்கின்ற குரங்கினங்கள் உதிர்த்த, தலையிலே ஆர்க்கினையுடைய, வெண்மையான பலாக் கொட்டைகள் எம்மருங்கும் சிதறிக் கிடக்கும் இம்மலை நாட்டிலே, விளங்கும் சிறு குடியிருப்பினரான எம் கானவரின் மகள் அவள்!

இவ்விடத்து, நின்னிடம் யான் வினவுவதனைக் கேளாய்; அவள் இவ்வழியாகப் போயினதை நீதான் கண்டனையோ?

சொற்பொருள்: 1. முகஞ்செய்தல் - நிரம்புதல்; இலங்குதல் - விழுந்து எழுந்து ஒளிவிடுதல்.2. சான்ற அமைந்தன. முடித்தலின்