பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 23


யானால், மிக்க நன்மையானதும், மிக்க அருமையானதுமான ஒன்றினை மேற்கொள்வாயாகுக!பெருமானே, இவளை நினக்கே உரிமையுடையவளாக மணந்து கொண்டு, விரைவாக நின்னூர்க்கே இவளையும் நின்னுடன் அழைத்துப் போய் விடுவதனை உடனே செய்வாயாக.

கீழ்க் காற்றினால் விளக்கம் பொருந்திய கடலலைகள் மோதி உடைக்கும், மணல் மேட்டிற் கிடக்கும் பழைமையாகிப்போன படகுகளைச் செப்பனிட்டுப் புதுக்கியிருந்தனர், புதிய வலையினையுடைய பரதவர்கள். உயர்ந்த மணலையுடைய அடைகரையிலே, அலைகளால் ஒதுக்கப்பட்டு வந்து கிடக்கும் சுறாமீனின் கொள்ளையினை அவர்கள் கண்டனர். மணம் நாறுகின்ற பாக்கத்தின்கண் உள்ள பிறருக்கும் அவற்றை அவர்கள் பகுத்துக் கொடுத்தனர். அத்தகைய கடல்வளம் மலிந்தது தொண்டி என்னும் கடற்கரைப் பட்டினம். அதைப் போன்று சிறப்புடன் விளங்குவது இவளுடைய பேரழகும் ஆகும். அது, நின் பிரிவினால் நலிதலுக்கு உட்படாமற் காப்பாயாக!

சொற்பொருள்: 1. தூவல் - துவலையை. 2. ஊழ்த்த புறப்படவிட்ட4. இறைகூரும் தங்குதன் மிகும். 5. பைதலகலுழவருத்தம் உடையவாய் அழ. 8. கொண்டல் - கீழ்க்காற்று; வடகிழக்குப் பருவக்காற்று.12. பகுத்தல் பலருக்கும் கொடுத்தல், புன்னை, புள்ளினங்களுக்கு ஆதாரமாயினாற்போல, நீயும் எங்கட்கு ஆதாரமாவாய் என்றது உணர்க.

உள்ளுறை பொருள்: ‘பரதவர், முறையாகக் கடல் மேற் சென்று முயன்று கடல்வளம் தேடுதலை விடுத்து, எதிர்பாராது காற்றால் ஒதுக்கப்பட்டுக் கிடைத்த சுறாமீன் கொள்ளையைப் பலருக்கும் பகுத்து வழங்கினர்.நீவிரும் முறையாக வரைந்து வந்து மணந்து, இவளுடன் இன்புறுதலை விடுத்து, எதிர்பாராது வாய்த்த களவிலேயே மயங்கினர்; அதனைப் பலரும் அறியச்செய்து, அலர் எழவும் காரணமாயினிர் என்பதாம்.

11. கைகவர் முயக்கம்!

பாடியவர்: ஒளவையார். திணை: பாலை. துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு, ஆற்றாளாய தோழிக்குத், தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

(அவன் பிரிந்தான். பிரிவுத் துயரால் அவள் நலிந்தாள். அதுகண்டு அவளுடைய தோழி மிகவும் வருத்தம் உடையவளா யினாள். தோழிக்குத் தான் அவன் வரும்வரை ஆற்றியிருப்பதாகக் கூறித் தலைவி அவள் வருத்தத்தைப் போக்க முயலுகிறாள்.