பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அகநானூறு - களிற்றியானை நிரை


இளைய மகளே! நின் சிறிய அடிகள் சிவப்ப எதற்காகவோ செல்கின்றனை?' என்று கேட்பவன். யாங்களோ, பிரிவு என்பதே இல்லாமல் ஒன்றுபட்டதும், உவர்த்தலே இல்லாததுமான பெருநட்பினால், இருதலைப் பறவைபோல, இரண்டு உடற்கும் ஓர் உயிரே என்னுமளவு எமக்குள் பெருகிய காதலை உடையோம்.

தினைப்புனத்தினைக் காக்கின்ற குன்றவர் மகளிர், ஓயாது குரலெழுப்பி ஆரவாரிக்கும் பொழுதெல்லாம், கிளிகளும் தம் இனத்தைக் கூவி அழைக்கும். பலாமரத்தின் பெரிய கிளைகளிலே, அணில்கள் ஆடிக் கொண்டிருக்கும். பெரிய காய்களைக் கொண்ட பழமாகிய பயன்களும் விளங்கும். அவற்றைக் கொள்ளுவதற்குக் குறவர்கள் குடிசை நாட்டியிருப்பர். அக்குடிசை மறையுமாறு தேன்பாயும் வேங்கை மலர்கள் அவற்றின்மேற் சொரிந்து பரந்திருக்கும். அந்தத் தோற்றத்தைப் 'புலியோ' என்று கருதிப், புள்ளிகள் பொருந்திய முகத்தினையுடைய யானையானது அஞ்சும். மேகங்கள் பொருந்திய பக்கமலைகளிலுள்ள மூங்கில்கள் முறிபடுமாறு, அந்த யானை விரைந்து பெயர்ந்து கடுகிச் செல்லும். அத்தகைய நல்ல மலை நாட்டிற்கு உரியவனே! அதனைக் கடந்து, நீ இரவுநேரத்தில் வருவதென்றால், மெல்லிய தன்மையினளான இவள் ‘நினக்கு எத்தகைய ஊறு நேர்ந்ததோ?' என எண்ணித், தான் வருந்தி உயிர் வாழ்ந்திராள். இதனையும் நீ அறிவாயாக!

சொற்பொருள்: 1. யாய் - தாய். காதலன் - அன்புடையான். 2. சீறடி - சிறியவான மெல்லடிகள். 3. இல - ஏடீ! குறுமகள் - இளைய மகள். 4. துவரா நட்பு - உவர்ப்பில்லாத என்றும் இனிக்கின்ற நட்பு. 5. இருதலைப்புள் - இரண்டு தலைகளை யுடைய ஒரு பறவை. 7. வெளில் - அணில். 8. விழுக்கோட் பலவு - பெரிய காய்களையுடைய பலாமரம். 9. குரம்பை - குடிசை. 10 . தேம் - தேன். புலி செத்து - புலி என்று கருதி.12. மழை - மேகம். கழை - மூங்கில், 16. ஒரும் : அசை.

தாய் தந்தையரின் அன்பை உரைத்ததன் மூலம் இற் செறிப்பும், நீ வரின் மெல்லியல் வாழலள் என்பதனால் இரவுக் குறியின் ஏதத்திற்கு அவள் அஞ்சுதலையும் கூறினள். ஏனலங் காவலர் குறவர் எனவும் கொள்வார் சிலர்.

உள்ளுறை பொருள்: அஞ்சவேண்டாத குடிசைக்கு யானை அஞ்சும். தனக்கு உணவு ஆகப் பயன்படும் மூங்கில்களை அந்த அச்சத்தால் நாசஞ் செய்யும். அதுபோல, இவள்மேல் அன்புடையவரான இவள் பெற்றோர், இவள் கருத்துக்கு இசைந்து இவளை நினக்குத் தருவர் என அறியாது, நீ வீணே அஞ்சினை. வரைந்து கொள்ளவும் முயன்றாயில்லை. அதனால்,