பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அகநானூறு - களிற்றியானை நிரை



          நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
          தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
          மாசுஇல் அங்கை, மணிமருள் அவ்வாய்,
          நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்,
          யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத், 5

          தேர்வழங்கு தெருவில், தமியோற் கண்டே,
          கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
          காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்,
          பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை,
          'வருகமாள, என்உயிர்' எனப் பெரிது உவந்து, 10

          கொண்டனள் நின்றோட் கண்டு,நிலைச் செல்லேன்,
          'மாசுஇல் குறுமகள் எவன் பேதுற்றனை?
          நீயும் தாயை இவற்கு? என யான்தற்
          கரைய, வந்து விரைவனென் கவைஇ,
          களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம்கிளையா, 15

          நாணி நின்றோள் நிலைகண்டு, யானும்
          பேணினென் அல்லெனோ - மகிழ்ந! - வானத்து.
          அணங்குஅருங் கடவுள் அன்னோள், நின்
          மகன்தாய் ஆதல் புரைவது-ஆங்கு எனவே!

நீர் நாய்களையுடைய பழைய நீர்த்தேக்கம் ஒன்று, அதன்கண் தாமரைகள் தழைத்திருக்கும். அத் தாமரைகளின் பூந்தாதாகிய அல்லியின் அயலே இருக்கும் மெல்லிய இதழினைப் போன்ற, குற்றமற்ற உள்ளங்கையினை உடையவன்; பவளத்துண்டுகள் போன்ற சிவந்த அழகிய வாயினை உடையவன்; நாவினாற் பயின்று பழகித் திருத்தமாகப் பேசப்படாததும், ஆனால் கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தருவது மாகிய, தேனினும் இனிக்கும் குதலைச் சொற்களைப் பேசுபவன்; காண்பவர் யாவரும் விருப்பமுறுகின்ற கவர்ச்சியினையுடையவன்; பொற்றொடி அணிந்தவன்; நம் புதல்வன்!

பொன் அணிகளைச் சுமந்து வருபவள் போல ஏராளமான நகைகளை அணிந்திருந்த, கூர்மையான பற்களையுடைய நின்காதற் பரத்தையானவள், அவன் சிறுதேர் ஒட்டி விளையாடிக் கொண்டு தெருவிலே தமியனாய் நின்றதைக் கண்டனள். நின்னைப் போன்று அவனும் தோற்றும் ஒப்புமையினைக் கருதிப் போற்றினள். எவரும் காண்பவர் இல்லாமையினால் துணிந்து அவனருகே சென்றாள்.மிகவும் மகிழ்வினை உடையவளாக, என் உயிரே! என்னிடம் வருவாயாக’ என்றாள். அவனும் செல்லப், பூண்களை அணிந்த தன் இளைய முலைகளிலே அவனை அணைத்துக் கொண்டாள். அதனை யானும் அன்று கண்டேன்.