பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அகநானூறு -களிற்றியானை நிரை



(ஒரு தலைவியைத் தான் களவிடத்தே கூடி இன்புற்ற ஒரு தலைவன், இரவுவேளையிலே வழியின் ஏதங்களையும் பொருட்படுத்தாமல் அவளை நாடி வருகின்றான். அதனைத் தலைவியால் பொறுக்க முடியவில்லை. ஒரு நாள் அவனுக்குத் துன்பம் என்றால் மறுநாள் அவள் வாழ்பவள் அல்லள். எனவே, தோழி, தன் தலைவியின் உள்ளத்தை உணர்ந்து, பகலிலேயே அவர்கள் சந்திக்கலாம் எனவும், அதற்கேற்ற இடம் எது எனவும் தலைவனிடம் கூறி, அவனது இரவு வருகையை நிறுத்த முயலுகிறாள்.)

          நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
          பூமலர் களுலிய கடுவரற் கான்யாற்று,
          கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
          மராஅ யானை மதம்தப ஒற்றி,
          உராஅ ஈர்க்கும் உட்குவது நீத்தம் - 5

          கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
          நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
          ஈங்கும் வருபவோ? - ஓங்கல் வெற்ப! -
          ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
          வாழ்குவள் அல்லள், என்தோழி; யாவதும் 10

          ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர்
          நீடுஇன்று ஆக இழுக்குவர், அதனால்,
          உலமரல் வருத்தம் உறுதும், எம்படப்பைக்
          கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
          பழம்துங்கு நளிப்பிற் காந்தள்.அம் பொதும்பில், 15

          பகல்நீ வரினும் புணர்குவை - அகல்மலை
          வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
          ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே.

உயர்ந்த மலையினையுடைய தலைவனே! நீரின் நிறம் மறையுமாறு, முதிர்புற்று உதிர்ந்த அழகிய மலர்கள் நெருங்கிய காட்டாற்றிலே, முதலைகள் பல கிடக்கும். உயர்ந்த கல்லிலே மோதி மீளுகின்ற சுழிகளும் பல உள்ளன. தன் இனத்தோடு சேராது, தனித்துத் திரியும் களிற்று யானையை, அதன் மதம் அழியுமாறு மோதி, வலிமையுடன் இழுத்துச் செல்லும் அச்சந்தரும் வெள்ளமும் அதன்கண் செல்லும்.

அவ் வெள்ளமுடைய காட்டாற்றினையும், அஞ்சாமையை உடைய காட்டுப் பன்றியைப்போல, நீயும் நடுக்கமின்றிக் கடந்து வருகின்றனை அணங்குகள் உறைவன என்பதனால் அச்சம் விளைகின்ற அரிய துறையினையும் கடந்து, நள்ளிரவின் நடு யாமத்திலே இவ்விடத்திற்கு வருபவரும் உளரோ? ஒருநாள்