பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 41


வளைகள் சொரியப் பெற்ற மெல்லிய சந்தினையுடைய முன்கையினள் அவள் பூக்கள் ஒழியப் பெற்ற கொடிபோலப் பொலிவில்லாமலும், பையப் பையவும் அவள் செல்வாள். சென்று, பொற்றகட்டான் இயன்ற அகலிடத்துத் தான்ஏற்றிய அந்தி விளக்கே துணையாக, எங்கணும் செல்லவும் சக்தியற்றவளாகச் சோர்ந்திருப்பாள். அந்த நம் காதலியின், வருந்தி மெலிந்த பிடரினைத் தழுவிய பின்னராவது, எம்மை மறத்தலை நீக்கி விடுவாயாக!

சொற்பொருள்: 1. வந்து - போந்து. 4. உருள்துடி கடிப்பு - உருளுகின்ற இழுகு பறை. மகுளி ஒசை. 4, ஆந்தைக் குரல், 'குத்திப் புதை’ என்றதோர் பொருள் தோன்ற இசைக்கும். 7. சிறத்தல் - நினைத்தது பெறுதல், 9-14 நறவின் சேயிதழ் செவ்வரிக்கு ஒப்பாகவும், குவளை கண்வடிவிற்கு ஒப்பாகவும் உரைப்பாரும் உளர். 14. வெரீஇ பிறர் தன் நிலை காண்பாரோ என அஞ்சி. 15. சில்வளை சொரிந்த என்றதனால், பல்வளை எல்லாம் முன்பே கழன்றோடின; சில்வளைகள் தாமும் பின்னர்ப் போயின என்க. 17. அடர் - பொற்றகடு. உயங்கு புறம் - மெலிந்த புறம்.

விளக்கம்: சிறுபுறம் முயங்கி என்றது, பின்னாக மறையச் சென்று, பின்னாகவே கட்டியணைத்து, அவளை வியப்பிலாழ்த்தி இன்புறல். 'பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது எனவும், துறைபற்றிய வேறுபாடமும் உண்டு. 13. “கதழ்ந்து வீழவிரறல்” என்பதனைக், கலிந்து வீழவிரறல்’ எனவும் கொள்வர்.

20. கொடிது அறி பெண்டிர்!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல். துறை: பகற்குறிக்கண் வந்த தலைமகன் சிறைப்புறத்தான் ஆகத், தோழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

(கானற்சோலையிலே ஒரு நாள், பகற்குறியிடத்தை நாடித் தலைவன் வந்திருக்கிறான். தனக்குமுன் வந்து அங்கிருக்கும் தோழியும் தலைவியும் ஏதோ உரையாடிக் கொண்டிருப்ப, அயலே சற்று ஒதுங்குகின்றான். அவன் வந்ததும், அவன் பக்கத்திலே மறைந்து நிற்பதும் தோழி அறிந்தாள். ஊரலரும் இற்செறிப்பும் ஏற்பட்டதனைத் தலைவிக்குக் கூறுபவள் போலத் தலைவனுக்கு உரைக்கின்றாள். அவன், விரைவிலே வந்து மணம் வேட்டல் வேண்டும் என்பது கருத்தாகும்.)