பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 47




நெடிய மலை உச்சிகள் தெய்வங்களை உடையன. அவ்விடத்திலே இருந்து திரளான அருவிகள் இழிந்துவரும். அவற்றையுடைய காடு பொருந்திய நாட்டிற்கு உரியவன் நம் தலைவன். அவனுடைய அகன்ற மார்பு மணம் கமழ்வது. அதனைத் தழுவப் பெறாததனால் வருந்திய வருத்தம் உடையவர் களாயினோம். அதனை இதனால் உண்டாகியதென்று அறியாதே, எம் தாயும் பிறரும் கலக்க முற்றனர்.

“வணங்காதவரைத் தேய்த்துப் பழித்த பலவாகிய புகழைக் கொண்டவன்; பெரிய கையினையுடைய நெடு வேளாகிய முருகன். அவனைப் போற்றினால் இவள் துயரம் தணிவாள் என, அவ்வேளை அவர்கள் எண்ணினர். அறிவு வாய்த்தலை உடைய முதுபெண்டிர்களும், அதுவே உண்மையாம் என்று கூறினர். ஆகவே, வெறியாடும் களம் நல்ல முறையிலே அமைக்கப்பெற்றது. வேலினை நிறுத்தி அதற்குக் கண்ணியும் சூட்டினர். வளம் பொருந்திய கோயிலிலே ஆரவாரம் உண்டாகு மாறு, வேலனின் புகழையும் பாடினர். வேலனுக்குப் பலிக் கொடையும் இட்டனர். அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்தும் தூவினர். இவ்வாறு, முருகனை அவர்கள் வரவழைத்தனர். அச்சம் பொருந்திய அந்த நாளின் நடு இரவிலே

சந்தனத்தின் மணம் வீசவும், பக்கமலையிலே உள்ள அரிய முழைஞ்சுகளிலே செறிந்துள்ள பலவகையான பூக்களை வண்டுகள் மொய்க்கும்படியாகச் சூடியும், அவன் வந்தான். களிற்று யானையாகிய தனக்கு உரிய இரையினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டாக வலிமையுடைய புலியானது, அந்தப் பார்வையோடு கூடியதாகப் பதுங்கிப் பதுங்கிச் செல்வதுபோல, நமது நல்ல மனையினைக் காத்து நிற்கும் காவலர்கள் அறியாதவாறு மறைந்து மறைந்து, நாம் மெலிதற்கு ஏதுவான இந் நோயைத் தணித்தற்கு உரிய நம் காதலனும் வந்தான்!

தன்னை விரும்புதலை உடைய நம் உள்ளத்தின் விருப்பம் நிறைவேறும்படியாக, நம் இனிய உயிரும் குழையும் படியாக, அவன் முயங்கினான். அப்படி அவன் நம்மைத் தழுவுந்தொறும் தழுவுந்தொறும், இவ்விடத்து நம்மவர், ஏதும் தொடர்பில்லாத வேலனுக்கு வெறியாட்டயர்ந்து தம் நெஞ்சு உலந்தமை,கண்டு, யான் உடல் பூரித்துப் பூரித்துச் சிரித்தேன் அல்லனோ!

சொற்பொருள்: 4. மறுவரல் - சூழ்ச்சி. 5. படியோர் - வணங்காதாராகிய அசுரர். பல்புகழ் - பலவாகிய புகழ். 1. ஆற்றுப்படுத்தல் - மனையிற் கொண்டு புகுதல்; வழிப்படுத்தல்,