பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 51



இருண்டுவரும் பெருமழையானது, விசும்பு தோல் உரிவதுபோல அகன்ற வானிடத்தே இயங்கித் தென் திசைக்கண் போய்ச் சேருகின்ற பனியுடன் கூடிய கரிய இரவின் வெள்ளத்தைச் சிறந்த நெற்றியினளாகிய நம்முடைய தலைவியானவள், தமியளாகவே நீந்திக் கொண்டு தன்னுடைய ஊரினிடத்தே நம்மைப் பிரிந்து இருக்கின்றனள்.

காவலை உடைய மதிற்கதவினைக் குத்திப் பாய்தலினால் பூண் பிளக்கப்பட்டுக் கூரிய முனை மழுங்கிய மொட்டையான வெள்ளிய கோட்டினையும், சிறிய கண்ணினையும் உடைய யானையின் நீண்ட நாவினையுடைய ஒளி பொருந்திய மணியின் ஒசைகள் கேட்கும். கழிகளுட்ன் பிணிக்கப்பட்ட கரிய தோலாகிய கேடகத்துப் பொழியும் அம்புகள் வந்து தைத்தலால் எழுகின்ற ஒசைகள் கேட்கும். இவை முழங்கும் ஒசையினையுடைய முரசொலியுடன் சேர்ந்து சதா ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தகைய நள்ளிரவு நேரத்திலே, உறையினின்றும் உருவி மீண்டும் உறையுள் இடாத உருவிய வாளினை ஏந்திய வலிய தோளினை உடையவனும், இரவிலே அயர்ந்து உறங்கும் சேனாவீரர்களைக் கொண்டவனுமாகிய மிக்க சினம் பொருந்திய நம் வேந்தனது பாசறையிடத்தே, யாம் அவளைப் பிரிந்து இருக்கின்றோம்! என் செய்வோம்?

சொற்பொருள்: 2. கொழுந்து - சங்கின் தலை 4. சிதரலந் துவலை - சிதறுகின்ற அழகிய மழைத்துளிகள், 8. மங்குல் இருள். 14. உதைப்பு - உதைப்பால் உளதாகிய ஓசை கறைத்தோல் - கருங்கடகு, 16. கழித்து - உருவி. 12. மண்ணை வெண்கோடு - மழுமட்டையான கோடு.

விளக்கம்: வேளாப் பார்ப்பனர் என்ற ஒரு சாரார், முன்னாள் சங்குகளைப் போழ்ந்து வளையல்கள் செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். 'வேளாப் பார்ப்பார் என இவரைக் குறித்தது, முத்தீ வேட்டு வாழும் பார்ப்பாரும் மற்றொரு சாரார் இருந்தமையாற் போலும் இவரைப் பற்றிய செய்தியைச் சிலப்பதிகாரமும் கூறுதல் காண்க. 'இரவுத் துயில் மடிந்த தானை' என்றதனால், சென்ற போரினைப் பலகால் இயற்றி, வினைமுடித்தபின் அமைதியாகத் துயின்று கொண்டிருந்த தானை என்க. போர் முடிந்ததும் ஊர் திரும்ப வேண்டியவனுக்கு, அன்றொருநாள் பாசறை இருப்பும் வேதனையைத் தருகின்றது என்க. 'நீந்தி என்றது, கரைசேர மாட்டாளாய்ச் சேரத் துடிதுடிக்கும் வேதனையுடன் கண் விழித்துக் காத்து இருக்கின்றனள் என்றற் பொருட்டு,