பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 57


          தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப்
          பெருந்தகை சிதைத்தும், அமையா பருந்துபட
          வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல் 15

          குருதியொடு துயல்வந் தன்னநின்
          அரிவேய் உண்கண் அமர்த்த நோக்கே!

நீண்ட மலைச்சாரலின்கண், அசையும் தண்டினையுடைய வலிய மூங்கில்கள் மேல்காற்றினால் தளர்ந்து வளையும்: அப்போது, அவற்றின் புதருட் கிடந்த வளைந்த கோடுகளையுடைய பெரிய புலிகள் வெளிப்பட்டுத் தோன்றும். அத்தகைய காட்டுப்பாதை கொடிதென்றும் அவர் எண்ணாராயினார். அவரைப் பிரிந்து நாம் அழுதிருக்க 'ஓரிடத்தும் நிலைபெற்று இருத்தல் இல்லாத பொருளின்மீது கொண்ட பற்றினால், நம்மைப் பிரிந்து அதனை இங்கு ஈட்டிவரச் செல்வர் என்று அயலவர் கூறுகிறார்கள்' என்று சொல்லுபவளே! நீ உறுதியாக, நல்ல மடமையினையே உடையவளாவாய்!

வடதிசைக்கண் உள்ள வேங்கடமலைப் பக்கத்து மன்னர்கள் திறையாகக் கொடுத்த, வெண்மையான கொம்புகளையுடைய யானைகளையுடையவர், வீரப் போரில் வல்லவரான பாண்டியர். அவர்கள் அறநெறி வழாமல் காக்கும் சிறப்புடையது கொற்கைப் பெருந்துறை.அதனிடத்தே பெறுகின்ற முத்துக்களைப் போன்று, முறுவலாற் சிறந்து விளங்கும் பற்களை உடையது நின் பவளம் போன்ற சிவந்த வாய். அது தடுத்தலால் தடைப் பட்டு அவர் தங்காராயினும் -

தேன் உண்டாகத் தெளிந்த நீரினை ஏற்ற, திரண்ட தண்டினை உடையவை குவளைப் பூக்கள். அவற்றின் சிறந்த அழகினை வென்று கெடுத்தன நின் கண்கள். அத்துடனும் அமையாமல், பருந்துகள் வந்து சூழ, அரசர்தம் போர்களை வென்ற வெற்றி பொருந்திய நல்ல வேலானது, இரத்தம் தோய்ந்து பிறழ்வது போன்ற, நின்னுடைய செவ்வரி பரந்த மையுண்ட கண்களின் அமர்த்த பார்வை இருக்கிறதே, அது எங்ங்ணம் அவரைப் பிரிந்துசெல்ல விட்டுவிடும்? (விடாது காண் என்பது கருத்து) -

சொற்பொருள்: 1. தயங்க - விளங்க, 2. கழை - தண்டு. வெதிர் - திணி மூங்கில். கோடை - மேல்காற்று. வெதிர் சாய்தலால் உள்ளே பதுங்கிக் கிடந்த புலி வெளியே தோற்றும் என்பது கருத்து. 7. வேங்கடம் பயந்த வேங்கட மலையிலே தோன்றிய எனலும் ஆம் 16 துயல்வருதல் அசை வருதல்.

விளக்கம்: நிலைபெறாத செல்வத்தை விரும்பி நிலைபெறும் காதன் மனைவியைக் கலங்கவிடுவாரோ? நின் வாய்தகைப்பத்