பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அகநானூறு -களிற்றியானை நிரை


சிறந்த அம்பினையுமுடைய கரந்தையாராகிய வீரர்கள், மேட்டுநிலத்திலே வீழ்த்தித் தாம் வெற்றிகொண்டனர். தங்களுடைய ஆண்மையினால், அக் கரந்தையார்கள் பதுக்கைக் கடவுள் வழிபாடு செய்ய முனைந்தனர். களத்திலே பட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு, அந் நடுகல்லுக்கு மயிலின் தோகைகைளைச் சூட்டினர். துடியினை அடித்தனர். நெல்லால் ஆகிய கள்ளோடு செம்மறி ஆட்டுக்குட்டியையும் பலி கொடுத்தனர். நடந்துபோவதற்கும் இயலாத கவர்த்த வழிகளையுடைய, புலால் நாற்றம் வீசும் அத்தகைய அரிய பாலைநில வழியிலே, அவளும் அவனுடன் செல்லத் துணிந்தாள். எம்மை மறந்து, யாரோ பிறள் ஒருத்தி என்பதாக அவள் தன் மனத்தும் ஆயினாளே!

முழவின் ஒலியானது என்றும் இடையறாது ஒலிக்கும் திருக்கோவலூரின் கோமான், நெடிய தேரினையுடைய திருமுடிக்காரி. அவனுக்கு உரியது கொடுங்கால் என்னும் ஊர். அவ்வூரின் முன்துறையிலேயுள்ள பெண்ணை என்னும் பேராற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற, நெறிப்பட்டகரிய கூந்தலினை உடையவள், பேதைமை உடைவளான எம் மகள்.

அவளுக்கு, அவளை அறிபவர் பிறர் எவரும் இல்லாத நாட்டிலே, அவளை அழைத்துப் போகும் துணைவன், அன்பு மிக்க உள்ளத்தோடு, அவளைப் பலகாலும் அணிந்து அணிந்து போற்றி, அவளுடைய அழகிய நலனைத் துய்த்துத் துய்த்துத் தன் மார்பே துணையாக அவளைத் துயில்விப்பானாக!

சொற்பொருள்: 3. தாள் - கடையாணி, கடிகை - காம்பு 4. குறும்படைமழவர்,கோட்டைவீரரும் ஆம்.5.முனை ஆ-பகைப் புலத்தவாய நிரை. விழுத்தொடை - தப்பாத அம்பு. 9. தோப்பிக்கள் - நெல்லாற் செய்யும் கள். துரு - செம்மறிக் குட்டி 15. கொடுங்கால் என்பது ஊர்; இந்நாளில் கீழ்க் கொடுங்காலூர் என வழங்குவது. -

விளக்கம்: 'எம்மும்' என்றது, தன்னுடன் ஆயத்தையும் பிற சுற்றத்தையும் சேர்த்துக் கூறியதாம். நெறி கூந்தல் - நெளிந்த கூந்தலும் ஆம். நடுகல் வழிபாடு பற்றிய பழைய வழக்கத்தை இங்கே உணரலாம். o

36. வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

பாடியவர்: மதுரை நக்கீரர். திணை: மருதம். துறை: தலைமகள், பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. சிறப்புற்றோர்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், அவன் வென்ற சேரன், சோழன், திதியன்,