பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அகநானூறு - களிற்றியானை நிரை


பாய்ந்தது. பிணக்கம் மேவிய, அழகிய வள்ளைக் கொடியினையும் கலக்கியது. தூண்டில் இட்ட வேட்டுவன் தூண்டிலை இழுக்கவும் வாராமல், கயிறிட்டுப் பிடிக்கும் சினமிக்க ஆனேறு திமிரிச் செல்வதுபோலச், செருக்குமிகுந்ததாக, விடியற்காலத்தே குளங்களைக் கலக்கியது. அத்தகைய பூக்கள் நிரம்பிய குளங்களை உடைய ஊரனே!

என்றும் வற்றாது நீர் வந்துகொண்டிருப்பது வையை மிக்க மணல் பொருந்திய அதன் அகன்ற துறையிலே, அழகிய மருதமரம் உயரமாக வளர்ந்திருக்கும் விரிந்த மலர்களையுடைய சோலையிலே, நறுமணம் கமழும் கூந்தலையும், குறியதான வளையல்களையும் உடைய பரத்தையை, நீ மணம் செய்து கொண்டனை என்று, ஊரார் சொல்லுவர்.

கொய்த பிடரிமயிரினை உடைய குதிரைகள் பூட்டியதும், மகரக்கொடி எடுத்ததுமான தேரினை உடையவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன், தலையாலங்கானம் என்னும் ஊரின் அகன்ற இடமெல்லாம், பகைவீரர்களின் குறுதியால் செந்நிறம் அடையுமாறு போரியற்றினான். சேரன், சோழன்; சினம் மிக்க திதியன்; போரிலே வல்ல யானைகளையுடைய பொற்பூண் அணிந்த எழினி, பன்னாடையினால் அரிக்கப்பெற்ற கள்ளினையுடைய எருமையூர்க்குத் தலைவன்; மார்பிலே பூசிப்புலர்ந்த தேன்மணம் கமழும் சந்தனத்தையுடைய இருங்கோ வேண்மான்; செவ்விதின் இயன்ற தேரினையுடைய பொருநன் என்று கூறப்பட்ட இந்த எழுவரது நல்ல ஆற்றல்களும் அறவே சாய்ந்து ஒழியுமாறு செய்தான். ஒருநாள் பகல் வேளைக்குள்ளேயே அவர்களது முரசுகளுடன், வெண்கொற்றக் குடைகளையும் அவன் கைப்பற்றினான். தன் புகழ்பற்றிய பேச்சு எங்கும் சென்று பரவுமாறு, அவர்தம் படைகளைக் கொன்று, அவன் களவேள்வியும் செய்தான். அப்பொழுது, வெற்றிகொண்ட அவன் வீரர்கள் ஆரவாரித்த ஆரவாரிப்பினும், இப்போது எழுந்த ஊரலர் பெரிதாக உள்ளதே!

சொற்பொருள்: 2. கோளிரை - கூற்றமாகிய இரை, 17 நார் - பன்னாடை 4. மெல்லடை கிழிய எழுந்து குவளைமலர் சிதையப் பாய்ந்து எனக் கூட்டுக.

உள்ளுறை பொருள்: வேட்டுவன் தூண்டிலிற் கோத்த இரையை, இலையின் கீழ்க்கிடந்த வாரால்மீன் விழுங்கியது போல, நின் பாணனின் இனிய சொல்லிலே மயங்கி, நீ அப்பரத்தையைக் கூடினாய். அது இலைகிழிய மேலே எழுந்தாற் போல, அப்பரத்தையரின் தாய்மார் நெஞ்சு வருந்துமாறு அவ்விடத்தை விடாத அன்புடனே வெளிப் போந்தனை.