பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அகநானூறு -களிற்றியானை நிரை

அவனுடைய இடப்பக்கத்தே விளங்கும்; வேகமாகச் செல்லக்கூடிய அம்புகளை அவற்றின் ஆற்றல் தெரிந்து எடுத்துக் கொண்டிருப்பவன், அவன்! வானளாவிய மலைமுடிகளை உடைய மலைநாடனாகிய அவனே நம் தலைவன்! அவன், தன் துணையாகிய எம்மை நினைந்து வருந்திக் குறியிடத்திற்கு வருவது உண்மையாகும்.

அங்ஙனம் அவன் வந்தான் ஆனால், அழகிய தளிர்களை உடைய அசோகமரத்தினது, தாழ்வாகவில்லாமல் உயரமாக இருக்கும் ஒரு கிளையிலே தொடுத்த, தொங்கும் கயிற்றினாலாகிய ஊசல் இல்லாது ஒழிந்த இடத்தை நோக்குவான். யாம் என் தோழியருடன் ஒருங்கு பாய்ந்து நீராடுகை இல்லாமையினால், கலங்குதல் இலவாகத் தெளிந்து நீண்ட இதழ்கள் பொருந்திய அழகிய நீலப்பூக்கள், எம் கண்களைப் போல மலர்ந்திருக்கும் சுனையையும் அவன் காண்பான். அழகான சிறகுகளையுடைய இளைய கிளியானது தூக்கிச் செல்லவும் முடியாத, பெரிய கதிராகிய வளைந்த பாரத்தை முறித்த, கோலாகிய உச்சிகளை உடைய கதிர்கள் கொய்து ஒழிந்த தினைப்புனத்தையும் நோக்குவான். எம்மை மீள நினைந்து நினைந்து துன்புற்றவனாகிப் பெயர்ந்து செல்லவும் மாட்டாதவனாக, அவன் வருந்துவான் அல்லனோ?

“சுனையினின்று வரும் வெள்ளிய அருவிகளைத் தன் உச்சியிலே கொண்டிருக்கும் உயர்ந்த மலையில், கூப்பிடு தூரத்தில் உள்ளதே உம்முடைய ஊர்” என்று, அவனோடு இறுதியாகக் கூடிப் பிரிந்த அன்று, அவனுக்கு அதனை அறிவுறுத்துதலை யான் மறந்துவிட்டேன். அத்தகைய தவறினால்தான் அவன் வாரானாயினான். அதனால், என் அழகு கெடுவேனாக!

சொற்பொருள்: 2. தெளிதல் - தீது கழித்தல், 4. துணை தலைவி. படர்ந்தது உள்ளி - வருந்தி நினைந்து. 8. மாறுதல் - ஆடாது ஒழிதல். 7 வீழ் கயிறு தாழ் கயிறு.12. தடக்குரல் பெரிய தினைக் கதிர். 13. குலவுப் பொறை - வளைந்த பாரம். கதிர்த்தலை போய்க் கோற்றலை ஆயிற்று தினை என்க. -

விளக்கம்: "வேங்கைப் பூக்களில் வண்டு மொய்க்கும் என்று இப்பாடல் தெரிவிக்கிறது. திவாகரமோ வேங்கையை வண்டு உண்ணாத மலர்வகையுள் சேர்க்கிறது. தினைப் பயிரின் உச்சியிலே உருண்ட கொம்புபோலக் கதிர்க் காம்புகள் விளங்கும். அதனைக் கோல்’ என்றனர். வந்தனன் ஆயின், பெயரலன், அவன் மறந்தனன் என்றும் கருதலாம்.