பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அகநானூறு -களிற்றியானை நிரை


லாகாது என, ஆன்றோர் ஒழித்த கொள்கையைப் பழித்த உள்ளத்துடனே, நெடுந்தொலைவு சென்றீர்; எம்மை நினைத்தும் அறிந்தீரோ” என, நின்னுடைய முள்போன்ற கூர்மையான பற்களை உடைய பவளவாயின் வழக்கமான முறுவலும் உள்ளடங்க, எனக்கு வருத்தமாகிய நோயைத் தோற்றுவித்தனை! என்பால் உண்மைக்கு மாறுபட்ட ஒன்றினைச் சொல்லி, இங்ஙனம் ஊடாதே ஆராயப்படும் அளவுக்குச் சிறந்த நின்னுடைய அழகினை, யான் என்றேனும் மறப்பேனோ?

நெடுந்தொலை கடந்து சென்றோம். அங்கே, மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரைசுதலால் ஒள்ளிய தீப்பொறிகளைச் சொரிந்தன. விழுந்த பொறிகளின் அருகே, மிகுதியாகக் கிடந்த சருகுகள் மறையும்படியாக நெருப்பு மூளத் தொடங்கியது. காற்றானது, நெடிய இடத்திலேயுள்ள உலர்ந்த ஊகம்புல்லின் மேலும், அந்நெருப்பைச் சுழற்றிப் பரவச் செய்தது. காட்டையே அழித்துவிடுவது போன்ற பெரு நெருப்பும் சென்றவிடமெல்லாம் பரந்தது. மேலே செல்லுவதைக் கைவிட்டுவிட்டு, வாணிகச் சாத்தும் அலறிற்று. செருக்குற்ற புலியைக் கண்டு வெருவிய மதமுடைய யானைக் கூட்டமானது, பலவிடத்தும் நிலை தடுமாறித் திரியத் தொடங்கிற்று. அத்தகைய, அகன்ற இடத்தையுடைய பெருங்காட்டிலே, ஒருநாள்:

மாலையிலே மறையும்போது, தாழ்வாக மேலை வானத்திலே தோன்றும் ஞாயிறும் மயங்கி மறைந்துவிட்டது. அரிது சென்ற செலவும் இயலாது ஒழிந்த அந்த அரிய வழியிலே, பரந்து கண்படும் பாயலின்கண்ணே, பொதுக்கென நின் நினைவிலே என் உள்ளம் சென்றது. என் பிரிவினால் மெலிவுற்றுக் கழன்று விழுகின்ற நின் வளைகளை மேலே ஏற்றிச் செறித்தவளாகத் தலைதாழ்ந்த நோக்குடன், நிலத்தைக் கால் விரல்களினாற் கீறியவாறே, பெண்மானைக் கண்டாற்போல நீ நிற்கக் கண்டேன். 'இனித்த நகையினை உடையவளே! யாம் இங்ங்ணம் நின் நினைவாகவே இருப்பவும், எம்மிடத்தே நினக்கு ஊடல் எப்படித்தான் வந்ததோ?’ எனச் சொல்லி, நினது பக்கம் உயர்ந்த புருவத்துடன், திரண்டு சிறுத்த நெற்றியையும் துடைத்துவிட்டேன். மணம் பொருந்திய நின் கூந்தலையும் கோதினேன். அந்த நல்ல சமயத்திலே, எல்லாம் வெறுமையாகி விட்ட அந்த வாய்மையற்ற கனவினை ஏற்று, ஏக்கற்ற வருத்தத்தினையும் யான் அடைந்தேன். அதனை, நீ நின் அறிவிற் கொள்ளாய் ஆகலின், எம்மை வெறுத்து ஊடுகின்றாயோ?

சொற்பொருள்: 1. ஒழிந்தது - பெண்கள் கணவருடன் வருத்தம் கொள்ளலாகாது என்று முன்னோர் கழித்தது. பழித்தல் - அதனை இகழ்தல். 6. பிசைதல் - தேய்த்தல், ஞெலி -