பக்கம்:அகமும் புறமும்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 • அகமும் புறமும்

வேண்டும் என்று நினைப்போர் எத்தனை பேர்? சோம்பித் திரிவதற்காகவே வாணாளை வீணாளாக்குபவர் எத்தனை பேர்? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்பவர் எத்தனை பேர்? இவர்கட்கெல்லாம் வாழ்க்கை நடைபெறாமலா இருக்கிறது? நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் இவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுவதைக் காட்டிலும், வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுளது என்று கூறுவதே பொருத்தமுடையது. இன்றைய நாளில் இத்தொகுப்பைச் சேர்ந்தோர் பலராவர்.

நிலைபெற வழி

ஆனால், பழந்தமிழன் இவ்வாறு நினைக்கவுமில்லை; வாழவுமில்லை. அவன் கண்ட பேருண்மை, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பதாம். அஃதென்ன என்பதைக் காண்போம், வாழ்க்கை நடைபெறுவது இவ்வுலகிலாகும். எனவே இவ்வுலகைப் பற்றிப் பழந்தமிழன் என்ன நினைத்தான்? வாழத் தகுந்த இடமாக இதனை நினைத்தானா, அன்றி இதனை பயனற்ற ஓர் இடமாகக் கருதினானா? இடைக்காலத்தில் உலகைப்பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஒருவாறு மனிதன் வாழ்வைக் கெடுக்கும் சூழல் நிறைந்த ஓர் இடமாகவும் இது கருதப்பெற்றது. ஆனால் பழந்தமிழன் உலகின் இயல்பை நன்கு அறிந்திருந்தான். ‘உலகம் நிலையில்லாதது’ என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இது நிலையில்லாதது என்பதனால், தானும் இதனோடு சேர்ந்து நிலையில்லாமல் அழிவதை அவன் விரும்பவில்லை. நிலையில்லாததாகக் கருதப்பெறும் இவ்வுலகிடை வாழ்ந்து தான்மட்டும் நிலை பெறும் வழியை அவன் தேடினான்; தேடிக் கண்டறியவும் அறிந்தான். அவன் கண்ட முடிவு,